பக்கம்:அனிச்ச மலர்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

அனிச்ச மலர்

 சிறிது தொலைவில் அந்த இரு மாணவிகளும் கலைந்து போகாமல் இன்னும் பேசிக் கொண்டுதான் இருந்தார்கள். அவர்கள் இன்னும் தன்னைப் பற்றித்தான் பேசிக்கொள்கிறார்களோ என்ற அவள் மனம் குறுகுறுத்தது. பேச்சு முடிந்து அவர்களோ, அல்லது வேறு யாராவது மாணவிகளோ டெலிஃபோனுக்கு அருகே வந்துவிடக் கூடாதே என்று வேறு சுமதியின் நெஞ்சம் பரபரப்பு அடைந்தது.

அப்பாடா! நல்லவேளையாக டெலிஃபோனை எதிர்ப்புறம் யாரோ மீண்டும் எடுத்துக் குரல் கொடுத்தார்கள்.

“பாலன் நாடகக் குழு என்கிற சொப்பன உலகம் கம்பெனியிலிருந்து யாரையாவது பேசச் சொல்கிறீர்களா?”

“நான் அதனோட மேனேஜர்தான்ம்மா பேசறேன்...” “நீங்க பேப்பர்ல விளம்பரம் பண்ணியிருந்தீங்களே... அது சம்பந்தமா...”

“ஆமாம்! மேலே சொல்லுங்க...”

சுமதி, தான் அவர்களுக்கு விண்ணப்பம் அனுப்பியது, தன் பெயர், முகவரி எல்லாவற்றையும் சொல்லிவிட்டுத் தனக்கு அவர்கள் அனுப்பிய பதில் பற்றியும் குறிப்பிட்டாள்.

“ஃபாரத்தை எழுதி அனுப்பறதோட நூறு ரூபாய் எம்.ஒ. பண்ணிடுங்க. அப்புறம் ‘இண்டர்வ்யூ’ டேட் எழுதறோம்...”

“இப்போ எனக்குக் கொஞ்சம் பணக் கஷ்டம். அதனாலே ஃபாரத்தை மட்டும் அனுப்பிவிட்டு, அப்புறம் நேரே வர்ரப்போ பணம் கொடுத்துடலாம்னு பார்க்கிறேன்...”

“நாங்க அப்படி ஒத்துக்கறதில்லேம்மா. எம்.ஓ. ரசீதை சேர்த்து அனுப்பியிருக்கிற அப்ளிகேஷன்ஸை மட்டுந்தான் கவனிப்போம். அவங்களுக்குத்தான் நேரே வரச் சொல்லி ‘இண்டர்வ்யூ’க்கு எழுதுவோம்”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/26&oldid=1117484" இலிருந்து மீள்விக்கப்பட்டது