பக்கம்:அனிச்ச மலர்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

25

“எனக்கு மட்டும் நீங்க கொஞ்சம் உதவி பண்ணப்பிடாதா? நான் கல்லூரியிலே படித்துக்கொண்டிருக்கிற மாணவி.”

“கொஞ்சம் லயன்ல இருங்க. கேட்டுச் சொல்றேன்” என்று ஃபோனை வைத்துவிட்டு, யாரிடமோ கேட்கப் போனான் அவன்.

சுமதி சில விநாடிகள் காத்திருந்தாள். இப்போது ஃபோனருகே இன்னும் சில பெண்கள் வந்துவிட்டார்கள். தான் இனிமேல் பேச வேண்டியவற்றை அவர்களுக்குச் சந்தேகம் ஏற்படாத வகையில் பேசி முடிக்க வேண்டும் என்பதைத் தன் மனத்திற்குள் எச்சரித்துக் கொண்டாள் சுமதி. மீண்டும் ஃபோன் எடுக்கப்படும் ஓசை கேட்டது. “நாங்க அதிலே போட்டிருக்கிற தேதிக்கு முன்னே பின்னே இரண்டு மூணுநாள் ஆனாலும் பரவாயில்லை. நீங்க எப்படியும் பணத்தை அனுப்பிச்சிடுங்க. அப்புறம்தான் உங்களை வரச்சொல்லி நாங்க எழுதுவோம்” என்று கூறிவிட்டு அவளுடைய பதிலை எதிர்பாராமலே ஃபோனை வைத்துவிட்டான் அந்த ஆள்.

“என்னடி சுமதி? இன்னும் ஃபோனை வைக்க மனசு வரலியா?” என்று கேட்டுக் கொண்டே சக மாணவி ஒருத்தி அருகே வந்தாள். சுமதி ஃபோனைக் கொக்கியில் தொங்கவிட்டாள். தன்னோடு கலகலப்பாகப் பேச முயன்ற மற்ற மாணவிகளை எவ்வளவு அவசரமாகத் தவிர்க்க முடியுமோ அவ்வளவு அவசரமாகத் தவிர்த்துவிட்டு, உடனே அறைக்குத் திரும்பினாள் அவள். நூறு ரூபாய்ப் பணத்தை எதிர்பார்த்துத் தயங்குவதன் காரணமாகத் தன் வாழ்வின் எதிர்காலத்தையே பொன்மயமாக மாற்றிவிடப் போகிற ஒரு சந்தர்ப்பத்தை நழுவ விடுவதா? என்று யோசித்தாள் அவள்.

கை வளைகளையோ, கழுத்துச் சங்கிலியையோ எடுத்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் மார்வாடிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/27&oldid=1117489" இலிருந்து மீள்விக்கப்பட்டது