பக்கம்:அனிச்ச மலர்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

31


உபசரிப்பதுபோல்’ என்று ஒப்புக்குச் சொல்கிறாளே ஒழிய அவளோடு செயிண்ட்தாமஸ் மவுண்ட்டுக்குப் போய்ச் சம்பாதிக்கிற பெண்கள் தட்டுக் கெட்டுச் சீரழிந்திருப்பார்கள் என்றே சுமதி நினைத்தாள்.

அதே சுமதிதான் இன்று மேரியைத் தன் அறைக்குக் கூப்பிட்டனுப்பியிருந்தாள். மேரி வருகிறவரை சுமதியின் மனத்தில் ஒரே போராட்டமாயிருந்தது. ஒரே குழப்பமாகவும் இருந்தது. ’ஏர்ஹோஸ்டஸாயிருக்கிறது, எப்படியோ அப்படித்தான் இதுவும்’ என்று அன்றைக்கு மேரி கூறிய சொற்கள் இன்று திரும்பத் திரும்பச் சுமதியின் செவிகளில் ஒலித்தன. அவளைச் சமாதானப்படுத்தவும் முயன்றன.

காலை பதினொரு மணிக்கு மே ஐ கம்இன்? என்ற முதல் கேள்வியோடும், "கேன் ஐ டூ எனிதிங் ஃபார் யூ சுமதி?” என்ற அதையடுத்த இரண்டாவது கேள்வியுடனும் மேரி சுமதியின் அறைக்குள் நுழைந்தாள்.

"மேரீ! அன்னிக்கு நான் பேசினதை எல்லாம் நீ மறந்து என்னை மன்னிச்சுடனும்.”

"லெட் அஸ் ஃபர்கெட் த பாஸ்ட்! இப்போ நீ கூப்பிட்ட காரியம் பற்றிப் பேசுவோம் சுமதீ... பழசெல்லாம் எதுக்கு ?”

“முதல்லே நீ உட்காரு மேரீ! இன்னும் நின்னுக்கிட்டே இருக்கியே! மெஸ்ஸிலேருந்து காபி, டீ ஏதாவது குடிக்கக் கொண்டாரச் சொல்லட்டுமா ?”

"ஒண்ணும் வேண்டாம். நீ கூப்பிட்ட காரியம் என்னன்னு சொல்லு சுமதீ.”

சுமதிக்கு அதை எப்படி ஆரம்பித்து எப்படிச் சொல்லுவதென்று தெரியவில்லை. எடுத்தெறிந்து பேசித் துரத்தியவளையே மறுபடி வலியக் கூப்பிட்டுக் கொண்டு வந்து, நீ சொன்ன காரியத்துக்கு நான் தயார் என்று கூறுவது எப்படி என்று கூச்சமாகவும் தயக்கமாகவும் இருந்தது. ஆனால் மேரியிடம் அதைச் சொல்லியும் ஆகவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/33&oldid=1132545" இலிருந்து மீள்விக்கப்பட்டது