பக்கம்:அனிச்ச மலர்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

35


ஒரு விதமாகப் பூர்த்தி செய்து எம்.ஓ. ரசீதையும் இணைத்து அனுப்பினாள். பகல் இரண்டு மணிக்குள் அந்த வேலை முடிந்துவிட்டது.

பிற்பகல் தபாலில் மதுரையிலிருந்து அம்மா எழுதிய கடிதம் கிடைத்தது.

அன்புள்ள சுமதிக்கு அநேக ஆசிகள். உன்னிடமிருந்து கடிதம் வந்து நாளாகிவிட்டது. ஏறக்குறைய நீ கடிதம் எழுதி ஒரு மாதத்துக்கும் மேலாகி இருக்கும் என்று நினைக்கிறேன். போன மாதம் அனுப்பியதுபோல் அடுத்த மாதம் முதல் தேதி உனக்கு நான் பணம் அனுப்ப முடியும் என்று தோன்றவில்லை. நம் வீட்டில் குடியிருந்தவர்கள் செங்கோட்டைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகிக் காலி செய்து கொண்டு போய்விட்டார்கள். இனி மேல் வாடகைப் பணம் வராது என்பதோடு அவர்களிடம் வாங்கியிருந்த இரண்டு மாச அட்வான்ஸ் பணத்தை நான் சிரமப்பட்டு மேனேஜ் செய்து திருப்பிக் கொடுக்க வேண்டியதாகிவிட்டது. புதிதாக யார் வாடகைக்கு வருவார்கள், எப்போது வருவார்கள் என்று தெரியவில்லை. வந்தால்தான் உறுதி.

எனக்கு ஸ்கூலில் சம்பளம் போட்டதும் முதல் வாரத்தில் ஏதோ முடிந்ததை அனுப்புகிறேன். இந்த மாதம் அதை வைத்து நீ அட்ஜஸ்ட் செய்துகொள். குடியிருந்தவர்களுக்கு அட்வான்ஸ் திருப்பிக் கொடுக்கவே பக்கத்தில் கைமாற்று வாங்க வேண்டியதாய்ப் போயிற்று. அதை வேறு திருப்பிக் கொடுக்க வேண்டும். இன்னும் சினிமாப் பத்திரிகைகளில் உன்னுடைய கேள்வி-பதில்களையும் ஆசிரியருக்குக் கடிதங்களையும் படிப்பதாகப் பக்கத்து வீட்டு சரசு சொல்லுகிறாள். உருப்படியாகப் படித்து முன்னேறப் பார். என்னருகே இந்த ஊரிலேயே இருந்து படித்தால் நானே உனக்குச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/37&oldid=1133111" இலிருந்து மீள்விக்கப்பட்டது