பக்கம்:அனிச்ச மலர்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

அனிச்ச மலர்


செல்லம் கொடுத்து உன்னைக் குட்டிச் சுவராக்கி விடுவேனோ என்ற பயந்துதான் மெட்ராசுக்கு அனுப்பினேன். இந்த வயசில் மறுபடி பரீட்சைக்குப் படித்து 'ஸெகண்டரிகிரேட்’ வாத்தியார் வேலை போதாதென்ற ’தமிழ்ப் பண்டிட்' ஆவதற்கு வித்வான் பாஸ் பண்ணி, இப்போதுதான் நாலு மாதமாகத் ’தமிழ்ப் பண்டிட்’ வேலை போட்டு பி.டி. கிரேடு சம்பளம் எனக்குத் தருகிறார்கள். உன் ஒருத்திக்காகத்தான் நான் இந்த சிரமம் எல்லாம்படுகிறேன் என்பதாவது உனக்கு நினைவிருக்கிறதா? உங்கப்பா இருந்திருந்தால் நான் இவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்காது. அவர் போனப்புறம் வாழ்க்கையே வெறுத்துப்போன எனக்கு நீதான் நம்பிக்கையாயிருக்கே. நீ சொல்ற எதையும் நான் தட்டிச் சொல்றதில்லை. போன வருஷம் கோடை விடுமுறைக்குக் கொடைக்கானல் போகணும்னே. மறுபேச்சுப் பேசாமல் கூட்டிக் கொண்டு போனேன். இருபது நாள் தங்கினோம். ஆயிரம் ரூபாய்வரை செலவு ஆச்சு உன் திருப்திக்காக இதெல்லாம் நான் செய்வது போல் என் திருப்திக்காக நீ நன்றாகப் படிக்கணும். பரீட்சையில் டிஸ்டிங்ஷன் வாங்கணும். உன்னைப்பற்றி நான் எப்படி எப்படியோ கனவு கண்டு கொண்டிருக்கிறேன் சுமதி ! நீ ஐ.ஏ.எஸ். பாஸ் பண்ணி பெரிய பெரிய உத்தியோகம் எல்லாம் பார்க்கப் போகிறாய் என்றும் நிறைய - பேரும் புகழும் சம்பாதிக்கப் போகிறாய் என்றும் நான் நம்புவது வீண் போகக்கூடாது சுமதி ! ஹாஸ்டல் வார்டன் அம்மாள் அனுமதி கொடுத்தால் கூட நீ இரண்டு வாரத்திற்கு ஒரு சினிமாவுக்கு மேல் பார்க்கக் கூடாது. கண்ட கழிசடைச் சினிமா மேகஸீனை எல்லாம் படிக்காதே. அதில் எதிலாவது தாறுமாறான கேள்விகள், ஆசிரியருக்குக் கடிதங்கள் எழுதி உன் பேர் அச்சில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/38&oldid=1133118" இலிருந்து மீள்விக்கப்பட்டது