பக்கம்:அனிச்ச மலர்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

அனிச்ச மலர்


"வேலை இருந்தது. வரலே... வந்துதான் என்ன வெட்டி முறிக்கப் போகிறோம். கிளாஸுக்கு வரதைவிட ரூம்லே இருந்து நோட்ஸை ஒழுங்காப் படிச்சால்கூட போதும்...”

”நேற்று உனக்கு உதவ முடிஞ்சதிலே எனக்கு ரொம்பத் திருப்தி சுமதி!... பை தி பை... தப்பா நெனைச்சுக்காதே, இப்பக்கூட எங்கிட்டப் பணம் இருக்கு... உனக்கு ஏதாவது தேவையிருந்தால் தரேன்...”

சுமதிக்குத் தேவை எதுவும் இல்லை. ஆனால் ’பணம் குறைவாக அனுப்பப்போகிறேன்’என்ற அம்மாவின் முன்னெச்சரிக்கைக் கடிதம் பயமுறுத்தியது. என்ன நினைத்தாளோ தெரியவில்லை மேரியின் தயவை அப்போதே பயன்படுத்திக் கொள்ள விரும்பியவள் போல், "இருந்தால் இன்னும் ஒரு ஐம்பது ரூபாய் கொடேன் மேரி! நூற்றைம்பதாகக் கணக்கு வைத்துக் கொள்ளலாம்” என்றாள் சுமதி.

"கணக்கு என்னடீ கணக்கு ! உனக்கு நான் கணக்குப் பார்த்துத்தான் கொடுக்கணுமா? ஐயாம் நாட் எ மணி லெண்டர். ஜஸ்ட் யுவர் கிளாஸ் மேட், டேக் திஸ்.”

இப்போது மேரி நீட்டியது ஒரு முழு நூறு ரூபாய் நோட்டு. சுமதி தயங்கினாள். ஆனால் ஒரு கணம்தான். புதுமுகங்கள் தேடும் நாடகக் குழுவினர் தன்னை இண்டர்வ்யூவுக்குக் கூப்பிட்டு எழுதினால் அன்று போகவர டாக்ஸி செலவு முதலியவற்றுக்காக மறுபடி மேரியிடமே கடனுக்காக நிற்கவேண்டாம்? இப்போதே அவளிடம் நூறாக வாங்கிக்கொள்வதில் என்ன தவறு? என்ற மறு பரிசீலனையும் மனத்தில் தோன்றவே அடுத்த கணம் அந்த நூறு ரூபாய் நோட்டையே தயக்கமின்றி அவளிடமிருந்து வாங்கிக் கொண்டாள் சுமதி. "மொத்தம் இருநூறு ஆகிறது. மேரி...” "கவுண்ட் பண்ணாதே சுமதி ! அது பிடிக்கலே. இருநூறு என்ன? உனக்காக ரெண்டாயிரம் கூட ஆகட்டுமே... நான் தரேன்...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/40&oldid=1133158" இலிருந்து மீள்விக்கப்பட்டது