பக்கம்:அனிச்ச மலர்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



40

அனிச்ச மலர்


கேள்வி ஒரு தினுசாக ஒலிக்கவே உடனே தற்காப்பு உணர்வையடைந்த சுமதி பொய் சொல்லத் துணிந்தாள். "இல்லே. கிரவுண்டிலே நின்னுண்டிருந்தா அவ. நான் போறபோது சும்மா எங்கூடப் பேசிண்டே வெளியிலே அவளும் புறப்பட்டுட்டா... அவ எங்கூட வரலே” "அப்படியானால் சரி... போ...” வார்டன் ஏன் இப்படிக் கூப்பிட்டுக் கேட்கிறாள் என்பது சுமதிக்குப் புரியவில்லை. மேரியோடு யார் யார் மாலை வேளைகளில் வெளியே புறப்பட்டுப் போகிறார்களோ அவர்களை எல்லாம் வார்டன் தீவிரமாகக் கண்காணிக்கிறாள் என்று அர்த்தமா? அல்லது தற்செயலாகத்தான் வார்டன் தன்னை திரும்ப மேலே அழைத்து இதை விசாரித்தாளா என்று புரிந்து கொள்ள முடியாமல் சுமதி மனம் குழம்பினாள். கீழே இறங்கிப் போய் மேரியோடு சேர்ந்து கொண்டு மறுபடி அவள் நடந்தபோது, மேரியே வார்டன் அம்மாளைப் பற்றி ஆரம்பித்தாள் "சுமதி, பீ கேர் ஃபுல்! வார்டன் அம்மாள் பெரிய ராட்சஸி! சில இன்னொஸண்ட் கேர்ள்ளை ராத்திரிலே கையை அமுக்கி விடு... காலை அமுக்கிவிடுன்னு தன் ரூமுக்கு வரவழைச்சுக் குட்டிச் சுவராக்கியிருக்கா... நீயும் ஏமாந்திடாதே..."

"நிஜமாவா மேரி...?" "நிஜமில்லையா பின்னே? நீ இந்தக் காலேஜிலே யாரை வேணாக் கேட்டுப் பாரேன்.”

பேசிக்கொண்டே அவர்கள் இருவரும் கல்லூரிக் காம்பவுண்டைக் கடந்து வெளியே டாக்ஸி ஸ்டாண்டும் அருகேயே பஸ் ஸ்டாப்பும் உள்ள பிரதான சாலையோரத்துக்கு வந்திருந்தார்கள். பஸ் ஸ்டாப் அருகே சில மாணவிகள் பஸ்ஸுக்காகக் காத்திருந்தனர். சுமதியும் விரைந்து பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தபோது,

"பஸ் வேண்டாம் சுமதி ! இப்பவே நேரமாச்சு. டாக்சியிலேயே போயிடலாம் வா!” என்று கூறித் தடுத்தபடி ஒரு டாக்சியையும் கையசைத்து வரவழைத்துவிட்டாள் மேரி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/42&oldid=1132023" இலிருந்து மீள்விக்கப்பட்டது