பக்கம்:அனிச்ச மலர்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

45



"லெட் அஸ் ஸெலபரேட் திஸ் நைஸ் மீட்டிங்" என்று சுமதியின் பக்கமாகக் கையை நீட்டிச் சுட்டிக் காட்டிச் சிரித்தான் ஓர் இளைஞன். சுமதி மெல்லத் தப்பித்துக் கொள்ள முயன்றாள்.


"எனக்கு டிரிங்ஸ் எதுவும் வேண்டாம்! நான் இங்கேயே ஸீட்'லே இருக்கேன். நீங்கள்ளாம் போயிட்டு வாங்க...”


"நோ. நோ. வாட் இஸ் திஸ்?. உனக்கு மேனர்ஸ் கூடவா புரியாது சுமதி? இவங்க உன்னைச் சந்திச்சதை ஸேலபரேட் பண்ணத்தான்னு கூப்பிடறாங்க. நீ என்னடான்னா..? இவங்கள்ளாம் யாருன்னு நினைச்சே நீ.? சும்மா தெருவிலே போற ஆளுங்க இல்லே. எல்லோரும் பெரிய மனுஷங்களாக்கும். இவர் க்வீன் அண்ட் கம்பெனி சேர்மன். அவர் எமரால்ட் பெயிண்ட்ஸ் பி.ஆர்.ஒ. இன்னொருத்தர் பெரிய டயர் மெர்ச்சென்ட். எல்லாரும் அநேகமா ஃபோர் ஃபிகர்ஸ்ல ஸாலரி வாங்கிறவங்களாக்கும்.” மேரி சுமதியின் காதருகே இதை மெதுவாகச் சொல்லி வற்புறுத்தினாள். அதற்குள் சுமதி மறுக்கிறாளோ என்று சந்தேகப்படத் தொடங்கிவிட்ட அவர்களில் ஒருவர்,


"மிஸ் சுமதி மட்டும் நம்மோடு இப்ப வரலேன்னா நாங்கள்லாம் இங்கேயே தர்ணா’ப் பண்ணிடுவோம்” என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.


அதற்குமேல் அந்தச் சூழ்நிலையில் எதிர்நீச்சலிடும் சக்தியைச் சுமதி இழந்தாள். மேலுக்குச் சிரித்தாற்போல் இருக்க முயன்றபடி உள்ளூற வேதனையோடு அவர்களுடன் சென்றாள். தியேட்டரின் மாடியிலேயே வராந்தாவில் இருந்த காஃபி பாரில் எல்லோருக்குமாகக் கோகோ கோலா ஆர்டர் செய்யப்பட்டது. ஆண்கள் அவரவர்கள் பிராண்ட் சிகரெட்டை வாங்கிப் புகைத்துக் கொண்டே உரையாடலானார்கள். இடைவேளை முடிந்து உள்ளே விளம்பர ஸ்லைடுகள் காண்பிக்கத் தொடங்கியிருந்தார்கள். ஸ்லைடுகள் முடிந்து படம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/47&oldid=1115913" இலிருந்து மீள்விக்கப்பட்டது