பக்கம்:அனிச்ச மலர்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

அனிச்ச மலர்



தொடங்குகிற நேரம் வரும்வரை அவர்கள் எல்லாரும் வெளியேதான் பேசிக்கொண்டிருந்தார்கள். மேரி ஒவ்வொருவரையும் தனித் தனியே சில விநாடிகள் அந்த லவுஞ்சிலேயே ஒரு மூலைக்கு அழைத்துச் சென்று ஏதோ பேசிவிட்டு வந்தாள். அப்படி அவள் அழைத்துச் சென்று பேசிக்கொண்டிருந்தபோது அவளால் அழைத்துச் செல்லப்பட்ட ஆளைத் தவிர மற்றவர்கள் சுமதியைச் சூழ்ந்துகொண்டு சம்பந்தா சம்பந்தமில்லாமல் அவளிடம் சிரித்துப் பேசலாயினர். சுமதியும் அவர்களிடமிருந்து முகத்தை முறித்துக்கொண்டு தப்பிப்போய் உள்ளே சென்று அமர முடியாதபடி சுற்றி வளைத்துக்கொண்டு நின்றுவிட்டார்கள். அவர்கள் அந்த நிலையில் அப்போது தனக்குத் தெரிந்தவர்களோ சக மாணவிகளோ யாராவது தன்னைப் பார்த்தால் என்ன நினைத்துக் கொண்டு போவார்கள் என்றெண்ணியபோது சுமதிக்கு மனம் கூசத்தான் செய்தது. எதற்கோ எங்கேயோ தொடங்கித் தான் எங்கேயோ வரக்கூடாத இடத்துக்கு வழி தப்பி வந்துவிட்டதாகத் தோன்றியது அவளுக்கு. மேரி அந்தத் தியேட்டரில் இடைவேளையில் அவர்களை எல்லாம் சந்தித்தது தற்செயலாக இருக்கும் போலவும் பட்டது. முன்பே திட்டமிட்டது போலவும் பட்டது. எது உண்மையாயிருக்கும் என்று முடிவு செய்ய இயலவில்லை.

இடைவேளை முடிந்து மீண்டும் படம் தொடங்கிய போது மறுபடி மேரியின் குரல் சுமதியின் காதருகே வழக்கமான கீதோபதேசத்தைத் தொடங்கிவிட்டது.


"நம்ம தேசத்திலேதான் ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய, இளமையின் அழகை எல்லாம் என்றைக்கோ புருஷன் என்று பெயர் சொல்லிக்கொண்டு தன்னிடம் வரப்போகிற எவனோ ஒர் ஊர் பேர் தெரியாத ஆண் பிள்ளைக்காக மட்டுமே என்று பணம் சேர்த்து வைக்கும் அனுபவிக்கத் தெரியாத கஞ்சப்பயலைப் போலச் சேர்த்து வைத்துக்கொண்டு காத்திருக்கிறாள். மற்ற ஊரில் எல்லாம் ஃப்ரீமார்ஷியல் லைஃப், எக்ஸ்ட்ரா மார்ஷியல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/48&oldid=1115906" இலிருந்து மீள்விக்கப்பட்டது