பக்கம்:அனிச்ச மலர்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

அனிச்ச மலர்



அறைக்குப் போய் முகம் கழுவிக்கொண்டு அவள் போவதற்குள் மெஸ் மூடிவிட்டார்கள். மெஸ்ஸில் சொல்லி விட்டுப் போயிருந்தாலாவது ஏதாவது எடுத்து வைத்திருப்பார்கள். சினிமாவுக்குப் புறப்படுகிற அவசரத்தில் மெஸ்ஸில் சொல்லவும் மறந்து போயிற்று. வெளியிலேயும் எதுவும் சாப்பிடவில்லை. இடைவேளையின் போது தியேட்டரில் கோகோ-கோலா சாப்பிட்டது தான், அதனால் பசி அதிகமாயிருந்தது.

மறுபடி கேட்வரை நடந்துபோய் கூர்க்காவிடம் சொல்லி பிஸ்கட் பொட்டலம், ரொட்டி ஏதாவது வாங்கிவரச் சொல்லலாம் என்ற தோன்றியது. மறுபடி படியிறங்கிக் கீழே போவதை வார்டனாவது வேறு யாராவது பார்த்துவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் அந்த எண்ணத்தையும் அடக்கிக் கொண்டு சுமதி பேசாமலிருந்துவிட்டாள். அன்றிரவு அவள் முழுப் பட்டினி கிடக்க வேண்டியதாகி விட்டது.

மாலையில நடந்த சம்பவங்கள் வேறு அவள் மனத்தை போதுமான அளவு குழப்பம் அடையச் செய்திருந்தன. தற்செயலாகச் செய்வது போல் மேரி எல்லாவற்றையுமே திட்டமிட்டுச் செய்கிறாளோ என்ற சந்தேகம் சுமதியின் மனத்தில் வலுப்பட்டுக் கொண்டிருந்தது காலேஜில் படிக்கிற வயதில் ஒர் இளம் பெண்ணுக்கு இத்தனை பணக்கார வர்த்தகர்களின் சிநேகிதம், கார்ச் சவாரி இதெல்லாம் சகஜமான முறையில் எப்படி சாத்தியம் என்பதைச் சுமதியும் யோசித்துப் பார்த்தாள். அவளுக்கு அது நேரடியாகப் புரியவில்லை. அதில் ஏதோ இடறுகிறாற்போல் இருந்தது. அது புரியவும் புரிந்தது. புரியாதது போலவும் இருந்தது. 'லிக்கர் பெர்மிட்' உள்ள நடுத்தர வயது சிநேகிதருக்கு, "நீங்க வண்டிலேயே இருங்க, பெர்மிட்டை எங்கிட்டக் குடுங்க, நான் நிமிஷமா வாங்கியாந்துடறேன்” என்று அவள் பதில் சொல்லிவிட்டுச் சிரித்த காட்சி சுமதிக்குக் கண்களிலிருந்து இன்னும் மறையவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/52&oldid=1115958" இலிருந்து மீள்விக்கப்பட்டது