பக்கம்:அனிச்ச மலர்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

51

 மறுநாள் மேரியை வரவழைத்து அவளிடம் நேருக்கு நேர் கண்டித்துப் பேசிவிடவேண்டும் என்றும் முடிவு செய்து கொண்டாள் சுமதி. மேரியிடம் எந்தவிதமான ஒளிவு மறைவுமில்லாமல், "அடி மேரீ! உன்னிடம் இன்ன செலவுக்காக நான் இருநூறு ரூபாய் கடன் வாங்கினேன். அதை ஐம்பது ரூபாயாக நாலு மாதத்திலே திருப்பிக் கொடுத்துடுவேன். அவசியமானால் அதுக்கு வட்டிகூட வாங்கிக்கோ” என்று கறாராகச் சொல்லிவிட வேண்டும் என்றுகூட நினைத்தாள். கழுத்து நுனிவரை அன்றைய அனுபவங்கள் கசப்பாயிருந்தது அவளுக்கு. மேரியின் ஆண்பிள்ளைச் சிநேகிதர்கள் என்று அவள் தியேட்டரில் அறிமுகப்படுத்திய ஆட்கள் எல்லாமே தத்தாரிகளாக இருந்தார்கள். அவர்களில் ஒருத்தன் தனக்கு, 'கோகோ கோலா' வேண்டாம் என்கிறபோது, "ஐ ஆல்வேஸ் ஹேட் ஸாஃப்ட் ட்ரிங்க்ஸ்” என்ற சொல்லி விட்டுச் சுமதியின் பக்கமாகப் பார்த்துக் கண்ணடித்தான். உடனே இன்னொருத்தன், “வயிறு சரியில்லேன்னா ஸோடா வேணும்னா சாப்பிடேன்” என்றான். அதைக் கேட்டு மறுபடியும் அந்த ஆள் சுமதியைப் பார்த்து முன்பு போலவே கண்ணடித்தபடி "ஐ நெவர் டேக் ப்ளெயின் ஸோடா” என்றான். இப்படி ஒரு கும்பலுக்கு 'கோ--பிட்வின்' ஆக மேரி பயன்படுகிறாள் என்பதை நம்ப முடியாமல் இருந்தது. அந்தக் கும்பலில் ஒருத்தன் தியேட்டர் இருட்டில் இடைவேளைக்குப் பின்பக்கத்திலிருந்த மற்றொருவனிடம் "டேய்! இந்த வாட்டி மேரி அறிமுகப்படுத்தின புதுமுகத்துக்கு நூற்றுக்கு நூறு மார்க் போடலாம்டா! சரியான வாளிப்புத்தான்" என்று சுமதிக்கும் காதில் விழும்படியாகவே சொல்லிக் கொண்டிருந்தான். சுமதி மெல்ல மெல்ல உஷாராகிவிட்டாள். ஒரு சபலத்தினால் மேரியிடம் கைநீட்டிப் பணம் வாங்கிவிட்டாலும் இப்போது சுமதியின் மனதில் தற்காப்பு உணர்ச்சியே மேலெழுந்து நின்றது. மேரியைப் பற்றிப் பயமாகவும் இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/53&oldid=1116042" இலிருந்து மீள்விக்கப்பட்டது