பக்கம்:அனிச்ச மலர்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பார்த்தசாரதி

55


டிக் கொண்டிருந்தார்கள். விளையாடும்போதே அந்தப் பெண்கள் வரம்புமீறி ஆண்களைத் தொடுவதும், ஆண்கள் அவர்களைத் தொடுவதும் நிகழ்ந்து கொண்டிருந்தன. சிரிப்பொலியும், எக்காளமிடும் குரல்களும், அரட்டைச் சொற்களுமாக அங்கே சுற்றிலும் கேட்டுக் கொண்டிருந்தன. மது, சிகரெட் புகை நெடி வேறு. மேரி அவளை உள்ளே கொண்டு வந்து விட்டுப் போனவள்தான், அப்புறம் திரும்பவில்லை, சுமதி மருண்டு போய்ச் சுற்றும் முற்றும் பார்த்தாள். எல்லாக் கண்களும் அவளையே நோக்கி வெறித்தபடி இருந்தன.

அதற்குள் அவள் எந்த நாற்காலியில் அமர்ந்திருந்தாளோ அந்த நாற்காலிக்குரிய மேஜையைச் சுற்றி வேறு நாற்காலிகளில் அமர்ந்த ஆண்களில் ஒருவர், “கமான் டார்லிங்! ஆட்டத்தைத் தொடங்கலாமா?” என்று சீட்டுக்கட்டை கலைக்கத் தொடங்கியிருந்தார்.

சுமதிக்கு நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. பதில் சொல்லலாம் என்றால் தொண்டைக் குழியை ஏதோ அடைத்துக் கொள்வது போல் இருந்தது. வாய் விட்டுப் பேச வரவில்லை.

அடுத்த கணமே சுற்றி இருப்பவர்கள் என்ன நினைத்துக் கொண்டாலும் பரவாயில்லை என்று தட்டுத் தடுமாறி எழுந்திருந்து ஒட்டமும் நடையும் கலந்த ஒர் அவசரத்தில் அங்கிருந்து வெளியேறினாள் சுமதி. அவளுடைய நல்ல காலமோ என்னவோ வெளியே அப்போதுதான் யாரோ ஒருவர் டாக்சியில் வந்து இறங்கி மீட்டரில் தொகை கணக்குப் பார்த்து அதை 'டிஸ்போஸ்’ செய்து கொண்டிருந்தார். வெளியே ஓடிவந்த சுமதி பின்புறம் கட்டிடத்தின் ஏதோ ஒரு ஜன்னல் வழியாக மேரியின் குரல் தன்னை இரைந்து கத்திக் கூப்பிடுவதை யும் பொருட்படுத்தாமல் டாக்சிக் கதவைத் திறந்து அதற்குள் ஏறிக் கதவைப் படிரென்று அடைத்துக் கொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/57&oldid=1117171" இலிருந்து மீள்விக்கப்பட்டது