பக்கம்:அனிச்ச மலர்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அழுக்குப்படாத தேவாதி தேவர்கள்'-என்று நாம் நினைக்க வேண்டிய அவசியமில்லை. சமூகத்துக்கு மிக மிக அவசியமான ஒரு புரொபஸர். ஒரு டாக்டர், ஒரு என்ஜீனியர், ஆகியோரைவிடச் சினிமாவில் நடிப்பவர்கள் உயர்ந்தவர்கள் என்று கருதப்பட்டு ஒரு புதிய சோம்பேறி வர்க்கத்தை உருவாக்குவதை எந்த அறிவாளியும் கவலைப்படாமல் எதிர்கொள்ள முடியாது. 'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்'- என்று பாடிய பாரதி 'வீிணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்'-என்றும் சேர்த்தே பாடினான். உழைப்பையும், தொழிலையும் போற்றுவதுடன் சோம்பலைத் தூற்றுவதும் புதிய தலைமுறைக்கு அவசியமாகிறது.

இந்த நாவலில் வருகிற 'கன்னையா' மாதிரிச் சோம்பேறியான பலர் சினிமா உலகம் என்ற போர்வையில் சமூகக் குற்றங்களை வளர்த்து வருகிறார்கள். உண்மையான கலைஞர்களையும், உழைக்கும் வர்க்கத்தையும், டெக்னீஷியன்களையும் வந்தனை செய்வதோடு போலிக் கலைஞர்களை, சோம்பல் வர்க்கத்தை, அரை வேக்காடுகளை நிந்தனை செய்யவும் வேண்டியது இன்று அவசியமாகிறது. அந்த வகை நிந்தனை ஓரளவு சமூக நன்மைக்கும் பயன்படவே செய்யும் என்பது என் கருத்து.

அதனால்தான் பழம் புலவர்களைப் போல் வணங்குவதை வணங்கி விட்டு ஒதுங்கும் மரபைப் பாரதி பின்பற்றாமல், வந்தனை செய்வதோடு-நிந்தனை செய்ய வேண்டிய வர்க்கமும் ஒன்றிருக்கிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினான்.

இந்நாவலில் வருகிற சுமதி நிந்தனை செய்யப்பட வேண்டிய ஒரு வர்க்கத்திற்குப் பலியாகி விடுகிறாள். அந்த வர்க்கத்தை எதிர்த்துப் போரிட வேண்டிய தெம்பு அவளிடமில்லை. காரணம், அவளே அந்த வர்க்கத்தினரில் ஒருத்தி ஆக ஆசைப்பட்டுத்தான் சீரழிகிறாள். ஆகவே அவளிடமிருந்து எதிர்மறைப் படிப்பினைகளைத்தான் நாம் தெரிந்து கொள்ள முடியும். அனிச்சப் பூவைப்போல் அவள் மிகச் சுலபமாக மிக விரைவில் வாடிக் கருகி விடுகிறாள்; அவளிடமிருந்து எச்சரிக்கை அடையலாம். அனுதாபப் படலாம். வேறு என்ன செய்ய முடியும்?

இதை வேண்டி வெளியிட்ட அலை ஒசைக்கும் இப்போது நூலாக வெளியிடும் தமிழ்ப் புத்தகாலயத்தாருக்கும் என் அன்பையும் விசுவாசத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தீபம்

அன்பன்,

நா.பார்த்தசாரதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/6&oldid=1117380" இலிருந்து மீள்விக்கப்பட்டது