பக்கம்:அனிச்ச மலர்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பார்த்தசாரதி

59



சுமதி ஏமாற்றத்தோடு போஸ்ட் ஆபீசுக்குப் போய்த் தபால் பெட்டி எண்ணைச் சொல்லி விசாரித்தாள். அவர்கள் சற்றுமுன் அவள் போய்த் தேடிட்டு வந்த அதே விலாசத்தை அவளிடம் குறித்துக் கொடுத்தார்கள். பொறுப்பான பதில் எங்கிருந்தும் யாரிடமிருந்தும் கிடைக்கவில்லை. மணியார்டர் ரசீதை வைத்து நடவடிக்கை எடுக்கலாம் என்றாலும் மணியார்டர் ரசீதையும் தந்திரமாக விண்ணப்பத்தோடு இணைத்து அனுப்பச் சொல்லியிருந்தார்கள் அவர்கள்.

பத்து இருபது ரூபாய் டாக்ஸிக்குச் செலவானது தான் மிச்சம். கெட்ட சொப்பனம் கண்டதுபோல் அதை மறந்துவிட முயன்றாள் சுமதி. ஆனால் மறக்கவும் முடிய வில்லை. ஏமாந்து விட்டோம் என்பது ஞாபகம் இருந்தது. 'பணம் கொடுத்து மயக்கி அழைத்துச் சென்று சினிமாவில் சேர்த்து விடுகிறேன்' என்று சொல்லும் மேரி ஒரு புறமும், பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டவர்கள் மற்றொரு புறமும் சுமதியின் மனத்தைக் குழப்பினர்.

இரண்டு நாள் கழித்து மேரி அவளைக் கல்லூரியில் சந்தித்தபோது அவளுடைய செயலுக்காக மிகவும் வருத்தப்பட்டாள். "ரெண்டு பெரிய மனுஷாளுக்கு இண் ரொட்டியூஸ் பண்றப்பவே பயந்துகிட்டு ஒடியாந்துட்டா அப்புறம் நீ எப்படி ஸ்டார் ஆறது?”

சுமதி இதற்குப் பதில் சொல்லவில்லை, மேரியும் அவள் மேல் நம்பிக்கை இழந்து அவளை விட்டுவிடத் தயாரில்லை. சுமதிக்கு அட்வைஸ் செய்தாள்.

"நீ ரொம்ப சேஞ்ஜ் ஆகணும். அடுத்தவங்களை நம்பணும். ஸோஷியலா இருக்கப் பழகணும். இப்போ இருக்கிற இந்தியன் ஸொஸைட்டி ஓரளவுக்குப் 'பெர்மிஸிவ்' ஆக இருக்கா விட்டாலும் நீயே கட்டுப்பெட்டியா நடந்துக்கிறியே? இந்த மடிசஞ்சித்தனமெலாம் போனாத் தான் நீ முன்னுக்கு வரலாம்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/61&oldid=1117505" இலிருந்து மீள்விக்கப்பட்டது