பக்கம்:அனிச்ச மலர்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பார்த்தசாரதி

61


"சரி வா; நான் ரூம்லியே இருக்கேன்" என்ற சொல்லி ஃபோனை வைத்தாள் சுமதி.

காலை ஒன்பதரை மணி சுமாருக்குத் தன் அறையில் ஏதோ படித்துக் கொண்டிருந்தாள் சுமதி. வார்டன் கூப்பிடுவதாக வேலைக்காரி வந்து சொன்னாள். சுமதி உடனே அறைக் கதவைப் பூட்டிக் கொண்டு வார்டனின் இடத்துக்குச் சென்றாள்.

அங்கே வார்டனின் நாற்காலி காலியாயிருந்தது. எதிர்ப்புறம் வரிசையாகப் போடப்பட்டிருந்த பார்வையாளர் நாற்காலிகள் ஒன்றில் அம்மா உட்கார்ந்து ஏதோ கடிதத்தைப் படித்துக் கொண்டிருந்தாள். சுமதியைப் பார்த்ததும் அம்மா கடிதத்தை மடித்துத் தன் கைப் பையில் வைத்துக் கொண்டுவிட்டாள்.

"என்னம்மா? நீ நேரே ரூமுக்கு வராமே இங்கே வந்து உட்கார்ந்து..."

"வார்டனைப் பார்த்தேன். அப்படியே உனக்கும் இங்கே இருந்தே சொல்லி அனுப்பினேன்..."

"அறைக்கு வாம்மா போகலாம். இங்க பேசுவானேன்?...”

“இங்கேதாண்டி பேசணும்! இரு! வார்டனும் வந்துடட்டும்... எனக்கு இன்னிக்கு ரெண்டிலே ஒண்ணு ரெண்டு தெரிஞ்சாகணும். நீ தொடர்ந்து படிக்கப் போறியா...அல்லது இப்படித்தான் உருப்படாமப் போகப் போறியா?" திடீரென்று அம்மாவின் குரல் கடுமையாக மாறியது. அவள் தன் கைப் பையிலிருந்து அந்தத் தடித்த உறையை எடுத்துப் பிரித்துக் கடிதத்தைச் சுமதியிடம் காட்டினாள். அது பாலன் நாடகக் குழுவுக்கு சுமதி எழுதிய கடிதம். உறையில் விலாசதார் இல்லை என்ற சிவப்புமை அடித்த கோடோடு கல்லூரி விடுதிக்கே அக்கடிதம் திருப்பி அனுப்பப்பட்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/63&oldid=1117955" இலிருந்து மீள்விக்கப்பட்டது