பக்கம்:அனிச்ச மலர்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

அனிச்ச மலர்


அழைத்துக்கொண்டு அந்தக் கடைக்குப் போய் ஒரு ஜோடி பிரேஸியர்ஸ் வாங்கிக் கொண்டு வந்திருந்தாள் சுமதி.

"இயற்கையாகவே நீ நல்ல வளர்த்தி! உனக்கு இதெல்லாம் எதுக்குடீ” என்ற அந்த சிநேகிதி கூடச் சுமதியை அப்போது கேலி செய்திருந்தாள். அப்புறம் சுமதி அதை அணிந்து வந்த தினத்தன்று "அழகுக்கு அழகு செய்வதுபோல் இது உனக்கு எடுப்பா இருக்குடீ சுமதி!" என்று அதே சிநேகிதி அவளைப் புகழ்ந்தும் இருக்கிறாள். அம்மாவும் வார்டனும் சேர்ந்து சதி செய்து இப்போது அந்தக் கனவுகளை எல்லாம் பாழாக்கி விட்டாற்போலத் தோன்றியது. அவர்கள் இருவர் மேலும் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது சுமதிக்கு. தன் வழியில் அவர்கள் முட்டுக்கட்டைகளாய்க் குறுக்கே நிற்பதாக உணர்ந்தாள் அவள்.

நீண்ட நாட்களுக்குப்பின் ரூம்மேட் அவளை அன்று காலை வெளியே அழைத்தாள். அன்று கல்லூரிக்கு விடுமுறை நாள். யூனிவர்சிட்டி லைப்ரரியில் ஒரு வேலையாகச் சேப்பாக்கம் வரை போய்விட்டு வரலாம் என்று, அறையில் உடன் வசிக்கும் விமலா வற்புறுத்தியும்கூடச் சுமதி மறுத்தாள். விமலா அவளை விடவில்லை. மேலும் வற்புறுத்தினாள்.

"தனியாகப் போயிட்டு வர்ரதுக்குப் போராடிக்கும்டி! சும்மா எங்கூட வா... வார்டன் ஒண்ணும் சொல்லமாட்டா. ஸ்டடீஸ் சம்பந்தமாத்தான் நாம யூனிவர்சிட்டி லைப்ரரிக்குப் போறோம். கேட்ட உடனே பெர்மிஷன் கிடைக்கும்.”

"நான் ஒண்ணும் வரலை. சலவைக்குப் போன ஸாரி ஒண்ணும் திரும்பி வரலே. கட்டிண்டு வெளியிலே போறத்துக்கு எங்கிட்ட நல்ல ஸாரிகூட எதுவும் இல்லேடி விமலா...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/68&oldid=1116961" இலிருந்து மீள்விக்கப்பட்டது