பக்கம்:அனிச்ச மலர்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

73

“ஸாரி ரொம்ப நல்லாத்தான் இருக்கு. ஆனால் நீ என்னை மேலே மேலே கடனாளியாக்கறே மேரீ?”

"சும்மா வாயை மூடு ! கடனாவது, ஒண்ணாவது ? கிஃப்ட் எல்லாம் கடன் ஆகாது. நான் இதை இங்கே கொண்டாரப்பவே கிஃப்ட்னுதானே சொன்னேன்”.

சுமதி மேரியைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தாள். அந்தப் புடவையையும் அன்றே கட்டிக் கொண்டுதான் வகுப்புக்குப் போனாள். எல்லாரும் அவளைப் பாராட்டினார்கள். அந்தப் புடவையில் அவள் பிரமாதமாகத் தெரிவதாய்க் கொண்டாடினர்.

மேரி தனக்கு அதை வாங்கிக் கொடுத்ததாகச் சுமதியும் யாரிடமும் சொல்லவில்லை. சுமதிக்குத் தான் இதை வாங்கி அளித்ததாக மேரியும் யாரிடமும் சொல்லிக்கொள்ளவில்லை.

நாலைந்து நாட்களுக்குப் பின் ஒரு சனிக்கிழமை காலையில் சுமதிக்கு ஃபோன் வந்தது. அபூர்வமாகத் தனக்கு ஃபோன் செய்வது யார் என்ற திகைப்புடன் போய் ஃபோனை எடுத்தாள் சுமதி. எதிர்ப்புறம் மேரி தான் பேசினாள்.

'சுமதி நீ அதிர்ஷ்டக்காரி! ஒரு கோல்டன் ஆப்பர்ச்சூனிட்டி வந்திருக்கு. அன்னிக்கு நீ சந்திச்ச புரொட்யூஸர்ஸிலே ஒருத்தர் இன்னிக்குக் காலை 10 மணிக்கு உன்னை மேக்-அப் டெஸ்ட்டுக்கே வரச் சொல்றாரு. தரணி ஸ்டுடியோவில் 3ஆம் நம்பர் ஃப்ளோருக்கு வரணும். அங்கே அதே புரொட்யூஸ்ரோட வேறொரு படம் தயாராயிக்கிட்டிருக்கு. வரயா, இல்லையா? வரதும் வராததும் உன் இஷ்டம். நான் ஒண்ணும் உன்னை வற்புறுத்த மாட்டேன்.”

"நான்தான் அன்னிக்குப் பாதியிலேயே ஒடி வந்துட்டேனே ? அங்கே யாரிட்டவும் நான் சரியாப் பேசக்கூட இல்லே-அவங்க யாரும் என்னைக் கவனிச்சுப் பார்த்திருக்கக்கூட முடியாதேடீ ?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/75&oldid=1120209" இலிருந்து மீள்விக்கப்பட்டது