பக்கம்:அனிச்ச மலர்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

அனிச்ச மலர்

அந்த ஏ.ஸி. ரூமில் டேபிள், சேர் அலுவலகச் சாமான்கள், படுப்பதற்கு மெத்தை தலையணையோடு கூடிய பெரிய கட்டில், சோபாக்கள் எல்லாமே இருந்தன. சுமதி மேரியின் காதருகே கேட்டாள்:

'என்னடீது இங்கே ஆபீஸ் ரூம்லேயே படுக்கையையும் போட்டு வச்சிருக்காரு?"

"சினிமாக்காரங்களுக்கு ஆபீஸ், படுக்கை அறை எல்லாமே ஒண்ணுதான்! இன்னும் நல்லாச் சொல்லணும்னாப் படுக்கையறையிலேதான் பல ஆபீஸ் விஷயங்கள் கூட ஸெட்டில் ஆகும்” என்று சொல்லிவிட்டபின் இத்தனை பட்டவர்த்தனமாக அதை ஏன் சுமதியிடம் சொன்னோம் என்று சிறிது தயங்கியவளாக நாக்கைக் கடித்துக் கொண்டாள் மேரி.

சுமதி இதற்குப் பதில் சொல்லவில்லை. குனிந்த தலை நிமிராமல் உட்கார்ந்திருந்தாள். அதற்குள் உள்ளே அந்த ஏ.ஸி. ரூமிலேயே இருந்த அட்டாச்டு பாத்ரூமுக்குப் போயிருந்த தயாரிப்பாளர் தொண்டையைச் செருமிக் கனைத்தபடியே திரும்பி வந்து சேர்ந்தார். மணியை அமுக்கி பையனைக் கூப்பிட்டபடி, குரலை சிறிது குறும்புத்தனமாகத் தணித்து, "என்ன மேரீ, சுமதிக்குப் பிராந்தியா? விஸ்கியா' என்றார். சுமதி துணுக்குற்றாள்.

"ரெண்டுமே இல்லே அவளுக்கு எதுவுமே பழக்கம் கிடையாது” என்று மேரி இதோடு விட்டிருந்தால் பரவாயில்லை. ஒரு விநாடி பொறுத்து, "அதெல்லாம் இனிமே நீங்கதான் பழக்கித்தரணும். உங்க கைதான் ராசியான கை” என்று சொல்லி வைத்தாள். சுமதிக்கு அது விரசமாகப்பட்டது. மேரி மிகவும் வெளிப்படையாகவே கீழிறங்கி வந்து பேசத் தொடங்கி விட்டாளோ என்று சந்தேகமாயிருந்தது. சென்னையைப் போன்ற ஒரு நவநாகரிக ஊரில் ஆண் தரகர்களைவிடப் பெண் தரகர்கள் மோசமானவர்களாகவும் மட்டமானவர்களாகவும் இருப்பார்கள் போலிருந்தது. ஆனாலும் மேரியை ஏறிட்டுக் கோபமாக உறுத்துப் பார்க்க முடியாதபடி
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/86&oldid=1122285" இலிருந்து மீள்விக்கப்பட்டது