பக்கம்:அனிச்ச மலர்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

அனிச்ச மலர்


பகல் ஒன்றரை மணிக்குள் சுமதி தண்ணிரில் குதித்துக் கரையில் ஒதுங்குகிற காட்சியை எடுத்துவிட முயன்றார்கள் அவர்கள். இருமுறை முயன்றும் ஷாட் ஓ.கே. ஆகவில்லை. காரணம், தண்ணிரில் குதிப்பதில் சுமதிக்கு இருந்த பயம்தான். என்னதான் லாங்-ஷாட்டாக எடுத்தாலும் கதைக்கு ஏற்ப வாழ்க்கையை வெறுத்தவள் ஒருத்தி தண்ணிரில் குதிப்பது போலக் குதிக்காமல் தயங் கித் தயங்கிப் பயந்து கொண்டே குதித்தாள் அவள். இந்த மாதிரிக் குதித்ததனால் அவளுக்கே முழங்காலில் இலே சாகக் காயம்கூடப் பட்டுவிட்டது. முதல் ஷாட்டின் போது அவள் பயப்பட்டாள் என்பதற்காக இரண்டாவது 'ஷாட்'டின்போது தண்ணிரில் ஆழம் குறைவான இடமாகப் பார்த்துக் குதிக்கச் சொன்னார்கள். முதல் ஷாட்டில் அவள் பயந்து குதிக்காமலே இருந்துவிட்டாள். இரண்டாவது ஷாட்டில் குதித்துக் காயம் பட்டுவிட்டது. முதலில் குதிப்பதையும் பின்பு கரையில் ஒதுங்கி எழுந்தி ருப்பதையும், தந்திரமாக எடுத்துவிட முயன்றார்கள்; முடியவில்லை.

அதற்குள்ளேயே பகல் உணவு நேரம் வந்துவிட்டது. நடிக்க வேண்டும்; நடிக்க வேண்டும் என்று ஆசை ஒரு பக்கம் இருந்தாலும் நடிப்பது எவ்வளவு சிரமமான காரியம் என்று சுமதிக்கு அப்போதுதான் புரிந்தது. நடிப் பதற்கு மிகவும் அழகாகவும் கவர்ச்சியாகவும் வாட்ட சாட்டமாகவும் இருந்தால் மட்டும் போதுமென்று அவள் இதுவரை நினைத்திருந்த நினைப்பு மேல்ல மெல்ல மனத்திற்குள்ளேயே கரைந்து அமுங்கிப்போய்விட்டது. 'காமிராவுக்கும், சுற்றி நிற்பவர்களுக்கும், பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கும் பயப்படாமல் அநாயாசமாக ஒரு சின்னக் காட்சியில் லாங்-ஷாட்டில் நடிப்பதுகூட இவ்வளவு கஷ்டமாக இருக்கிறதே, என்று அவள் இப்போது உணர்ந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/98&oldid=1146913" இலிருந்து மீள்விக்கப்பட்டது