134
அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்
மீன் முதிர் இலஞ்சிக் கலித்த தாமரை நீர் மிசை நிவந்த நெடுந் தாள் அகல்இலை இருங் கயம் துளங்க, கால் உறுதோறும் பெருங் களிற்றுச் செவியின் அலைக்கும் ஊரனொடு எழுந்த கெளவையோ பெரிதே நட்பே, கொழுங் கோல் வேழத்துப் புணை துணையாகப் புனல் ஆடு கேண்மை அனைத்தே அவனே, ஒண் தொடி மகளிர் பண்டை யாழ் பாட ஈர்ந் தண் முழவின் எறிகுணில் விதிர்ப்பத், தண் நறுஞ் சாந்தம் கமழும் தோள் மணந்து, இன்னும் பிறள் வயினானே, மனையோள் எம்மொடு புலக்கும் என்ப; வென் வேல் மாரி அம்பின், மழைத்தோற் பழையன் காவிரி வைப்பின் போஒர் அன்ன என் செறிவளை உடைத்தலோ இலனே, உரிதினின் யாம் தன் பகையேம் அல்லேம்; சேர்ந்தோர் திரு நுதல் பசப்ப நீங்கும் கொழுநனும் சாலும் தன் உடன்உறை பகையே.
- பரணர் அக 186 வலிய துண்டில் கயிற்றை உடைய மீன் பிடிப்பவர் மழை பெய்தலை விரும்பாதவர்; வறுமையில்லாத வாழ்வை உடையவர். அவர்கள் தூண்டிலில் கோத்த இரையை மீன் பற்றிக் கொண்டதை உணர்ந்து தூண்டிலை இழுப்பர். இத்தகைய இயல்பு கொண்ட நீர்நிலை. அதில் தழைத்த தாமரையின் நீர் மீது உயர்ந்த நீண்ட காம்பை உடைய அகல மான இலையை உடைய பெரிய குளம்; அலையக் காற்று வீசும் போதெல்லாம் பெரிய ஆண் யானையின் காது போல் அசையும். இத்தகு இயல்புடைய ஊரன். அவனால் எனக்கு எழுந்த அலரோ பெரிது. என்றாலும், அத்தகையவனது நட்போ செழிப்பான கொறுக்கங் கழியால் ஆன தெப்பத்தைத் துணையாய்க் கொண்டு நீரில் விளையாடுகின்ற நட்பின் அளவினதே யாகும்.
அத் தலைவனோ தொடியைக் கொண்ட மகளிர் பழைய யாழினை வருடிப் பாடவும் முழவைத் தடியால் அடிக்கவும்,