பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வருங்காலத் தமிழகம்

9

சிறிது. தெரிந்தவை உண்மை, தெரியாதவை பொய். அவர்கள் பழமையில் மட்டும் நன்மை காண்பவர். புதுமையில் நன்மை இருக்கக்கூடும் என்ற எண்ணம் அவர்களுக்கு இராது. தம் பழைய எண்ணங்கள், தாம் போற்றும் பழைய வீரர், பழைய நூல்கள் ஆகியவற்றையே மேலும் மேலும் பேசுவர். நாட்டு முன்னேற்றம் என்றால் பழங்கால நிலைமைதான் வேண்டும் என்பர். இலக்கியம் என்றால், 'முன்னோர் இலக்கியம், முனிவர் இலக்கியம் இருக்கிறது. அதைத் துய்ப்பதினும் வேறு இன்பம் ஏது?' என்பர். முன்னோர் அறிவின் பெருமை பேணுவர். 'அவர் அறிவைப் போற்றுதல் போதாது; அவர் வழி நிற்றல் வேண்டும்' என்பதை அவர்கள் காண்பதில்லை. முன்னோர் கண்ட நெறியை அவர்கள் காணாது பின்பற்றுவர்; அதைக்கண்டு அவ் வழி நின்றால் அந் நெறி வளர்ச்சியுறும் என்பதை அவர்கள் எண்ணமாட்டார்கள். அவர்கள் போக்கு பழமையாகிய செக்கைச் சுற்றிச் செல்லும் செக்கு மாட்டுப் போக்கு!

தமிழ் நாட்டார் சில காலமாகக்கொண்ட போக்கு இது. வள்ளுவர் காட்டிய வழி என்பர். அவ் வழியில் ‘நிற்பார்களே' யன்றிப் 'போக' மாட்டார்கள். 'அவர் காட்டிய வழியில்' 'சென்றோம்' என்பாரேயன்றிச் 'செல்வோம்' என்று முனைய மாட்டார்கள். வள்ளுவர் இயற்றிய திருக்குறள் மாண்புடைய தென்பர். ஆனால் அதுபோல் இன்று நூல் இயற்றாதிருத்தல் தான் தமக்கு மாண்புடையது என்று அதே மூச்சில் கூறுவார்கள். புதுமை, பழமையின் நிழல் என்பது அவர்கள் வாழ்க்கைத் தத்துவம்.

ஆசிரியர் ப. சுந்தரம் பிள்ளை 'ஆரியம்போல் அழிந் தொழியா' என்றதன் முழு உண்மை இதுவே. ஆரியம் எதனால் அழிவுற்றது? பழமை பேணியதனாலும், புதுமை பேணாததாலும் மட்டுமே. காளிதாசன் ‘குமார சம்பவம்' இயற்றினான். ஆயிரம் கதையைப் ‘பார்வதி பரிணயம்' என்று இயற்றத்தான் தோன்றியது! வடமொழி இலக்கியத்தின் பிற்பகுதி முழுவதும் இராமாயண பாரதங்களுக்கு இடைச்செருகல் ஏற்படுத்துவதும், பழங்கதைகளைப் புதுப் புராணங்களாக்குவதும் இவற்றைச் சுற்றிச் செக்கரைப்பதுமாகவே முடிந்தது. இதனாலேயே வடமொழி இறந்த தென்பதை அறியாது, இன்றைய இந்தியப் பெருநிலப் பரப்பில் பல தாய்மொழிகளும் அவ் வழியே