(102
அப்பாத்துரையம் - 12
கையாண்டனர். இவற்றால் போரின் வீரத்தில் மாறுதல் ஏற்படா விட்டாலும், பயனில் மாறுதல் ஏற்பட்டது.
ஆகஸ்டு 25-ஆந் தேதி புரட்சி வீரர் படுதோல்வி அடைந்தனர்.இது பிரிட்டிஷார் இழந்து வந்த ஊக்கத்தை மீட்டும் உயிர்ப்பித்தது. புதிய முற்றுகைப் படைகள் புகை வண்டிகளில் வந்து சேர்ந்த வண்ணம் இருந்தன. செப்டெம்பர் 14-ஆந் தேதி கோட்டையின் நான்கு வாயில்களும் தாக்கப்பட்டன. படிப்படியாக உட்புறம் முக்காற்பகுதி எதிரி வசமாயிற்று; ஆயினும், தில்லி வீரர் அங்குலம் அங்குலமாக நின்று வீரப் போராடினர். அது வெற்றிக்கான போரன்று: தேசத்தின் புகழுக்கான போராய் மாறிற்று.
134 நாள் முற்றுகைக்குப்பின் தில்லி வீரர் பின்வாங்கத் திட்டமிட்டனர். ஆனால், பேரரசர், தம் மூதாதையர் தலைமையிடத்தை விட்டுப்போக இசையவில்லை. அவர் ஹுமாயூன் கல்லறை மாடத்தில் ஒளிந்திருந்து, பின்னால் பிடிபட்டார். இளவரசர் இருவரும் வீரமாகப் போரிட்டு மாண்டனர். மனைவியுடனும் ஒரு செல்வப் புதல்வியுடனும் பேரரசர் குடும்பம் நீண்டநாள் பர்மாவில் மாந்தலே சிறையில் கிடந்து, விடுதலைக் கனவுகளில் தன்னைப் புதைத்தது.
புயலுக்குப்பின் சோனா மாரி
தில்லி வீழ்ச்சியுடன் விடுதலைப் போர் நின்றதென்றே பிரிட்டிஷார் கனவு கண்டனர். ஆனால், கிழக்கிந்தியாவின் போராட்டம் அதன் பின்னர்தான் உக்கிரமாயிற்று. அது தில்லிப் போருடன் துணை விடுதலைக் காவியத்தின் நடுப்பகுதியாயிருந்திருக்கும்.ஆனால், அது வருங்கால விடுதலைக் கனவாளர்களின் வீரத்தை ஊக்கும் வீரகாவியமாயிற்று. குமார சிங்கனின் ஒப்பற்ற குரங்குப்போர் முறைகள், ஜான்ஸி அரசி இலட்சுமிபாயின் மயிர் சிலிர்க்க வைக்கும் வீர நிகழ்ச்சிகள், மாய மனிதனாகிய தாந்தியாத் தோப்பேயின் மனித சத்தி கடந்த போர்த்திறங்கள் ஆகியவை விடுதலைப் போரின் முற்பகுதியைத் தாண்டி இந்திய மக்களின் உள்ளத்தைத் தூண்டின. இவற்றைப் பாட இந்தியாவில் போதிய கவிஞர்கள் இருந்திருந்தால் இந்திய இலக்கியத்தில் பழங்கால இராமாயண பாரதங்களின் புகழ்