நாடுகள் சங்கம்) கொடியாகத் தூக்கியுள்ளது என்பது உண்மையே. 'உலக மக்கள்' என்ற குரல் எழுப்பப்பட்டுள்ளதும் உண்மையே. ஆனால், உலக அவையின் உறுப்பினர் இன்னும் நாட்டாதிக்க அரசுகளும் ஆதிக்க நாடுகளும் மட்டுமே. மக்கள் நேரடிப் பேராட்சி இன்னும் அதைத் தீண்டவில்லை. அது மட்டுமன்று. உலகக் குறிக்கோளை முதன் முதலில் உலகில் உயர்த்திய இனம், வள்ளுவர் இனம், தமிழினப் பண்பாடு அதில் இடம் பெறவில்லை. அதில் வீற்றிருக்கும் அரும்பெரும் உரிமை பெற்றிருந்த ஒன்றிரண்டு தமிழர்; தமிழ் என்ற பெயரை மறந்தும் 'உச்சரிக்காத' தமிழர்களே! ஆதிக்க இனங்கள், நாடுகளைக் கட்டுப்படுத்த, மொழி இன சமன்மை காக்க இன்னும் வகை காணப்படவில்லை. இந்நிலையில் இன்றைய உலகக் குறிக்கோள் 'தமிழகமில்லாத ஒரு உலகக் குறிக்கோள் மட்டுமல்ல, 'தமிழிகம்' போன்ற ஆதிக்கமற்ற, உரிமையற்ற இனங்களை விலக்கி வைத்த ஓர் உலகக் குறிக்கோளாகவே உள்ளது; பண்டை நாகரிக நாடுகள் பலவும் இல்லாத இடைக்கால நாகரிகங்களின் மேற் பூச்சு உலக மாகவே உள்ளது.
தமிழகத்தின் முழுநிறை வரலாறு வகுத்துக் காண்பது என்பது எளிதன்று. மேல் திசைத் தொடர்புகளிலிருந்தும், மேல் திசை வடதிசையாளர் மேற்கொண்டுள்ள பழம் பொருளாராய்ச்சி, மொழியாராய்ச்சி, கல்வெட்டாராய்ச்சிகளின் உதவிகொண்டும் உலகின் பெரும் பகுதியின் வரலாறும் எழுதப்பட்டு வருகின்றது. இவ்வரலாறுகள் இயற்றியவர் தமிழ், தமிழினம், தமிழகம் ஆகியவை பற்றி எதுவும் அறியாதவர், அறிய முடியாதவர்; அவ்வழி நம்பிக்கையின் நிழலோ, களவோ அற்றவர். அதுமட்டுமன்று. நடு நிலையுணர்வு அவ்வழி அவர்களில் பெரும்பாலாரை நாடச் செய்யவில்லை. மேலைப் பற்றாட்சி முதன்மையாகவும், வடதிசைப்பற்றாட்சி செறிவாகவும் அந்நடு நிலையைத் தடையிட்டு நிறுத்துகிறது. கிட்டிய சான்றுகளைக்கூட, உலகப் பொது மக்களோ, தமிழரோ, அறியாத வகையில் திரையிட்டுள்ளனர் பலர். ஒருசாரார் அறிவதை வேறொருசாரார் அறியாமல் மறைக்கும் தட்டிகள் இட்டுள்ளனர் வேறு சிலர்.
இக்குறைபாடுகள் இன்று பெரிதாகத் தோற்றுவது இயல்பே. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன் இவை இன்னும் பெரிதாகத்தான் இருந்தன. குறைபாடுகளை அகற்றும் முயற்சியே