உணர முடியாமல் தத்தளிக்கின்றனவென்றால், அது தமிழக வரலாறு காணாத குறையாலும், தமிழக வரலாற்றொளியற்ற உலக வரலாறும், கீழ்திசை வரலாறும் காண முயல்வதாலுமே என்னலாம். மேலும், உலகின் எல்லா நாடுகளின் பழமை வரலாறு களும் தமிழக வரலாற்றுடன் தொடர்பு கொண்டவை. தமிழக வரலாற்றில் கருத்துச் செலுத்தாத உலக வரலாற்றாசிரியர் அத்தகைய பல உலகப் பழமைகளை உலக வரலாற்றுடன் இணைக்கமுடியாமல் விட்டுவிட நேர்ந்துள்ளது. உலக வரலாறும் உலக நாகரிகமும் உயிர் பெறாச் சித்திரங்களாய் இயங்குவதன் காரணம் இதுவே.
இம் முத்திறத்திலும் தமிழக வரலாற்றுக் கூறுகளைச் சுட்டியே னும் செல்ல இச்சிற்றேடு முயன்றுள்ளது. தமிழுலகும் அறிவுலகும் - தமிழ்ப் பற்றுடைய உலகு மட்டுமன்று, உலக அறிவில் முனைந்தாலும் தமிழினத்தைப் புறக்கணிக்க விரும்பாத அறிவுலகும் - இம்முயற்சியைத் தமிழ்த் தொண்டிலும், உலகத் தொண்டிலும், ஒரு சிறு கணுவாகக் கொண்டு வரவேற்று, இன்னும் இது போன்ற முயற்சிகளை மேன்மேலும் ஊக்கிப் பெருக்கும் என்று நம்புகிறோம்.