பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/31

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

10 அப்பாத்துரையம் - 16


தமிழர் கற்புத் தெய்வமாகிய கண்ணகிக்கு அக்கல்லிலேயே சிலை செதுக்குவித்தான். இது தமிழ்ப் பெருங்காப்பியமான சிலப்பதிகாரம் தரும் செய்தியாகும்.

கடல் கடந்த வெற்றிகள்

நில எல்லையில் தமிழர் வெற்றிகள் இவை. ஆனால், ஏனைய கீழ்திசை மன்னரைப்போல, அசோகன், ஹர்ஷன், அலாவுதீன், அக்பர் ஆகியவர்களைப்போலத் தமிழர் நிலப் பேரரசுடன் நின்றவரல்லர். அவர்கள் தமிழ்க் கொடிகள் கடல் அலைகள் மீதும் தவழ்ந்தன. பாரதியார் கவிதைமொழிகளிலே இந்த வெற்றிகளும் எதிரொலிக்கின்றன.

சிங்களம், புட்பகம், சாவகம் -ஆதிய
தீவுபலவினும் சென்றேறி - அங்கே
தங்கள் புலிக்கொடி, மீன்கொடியும் நின்று
சால்புறக் கண்ட தமிழ்நாடு.

தமிழர் கை வரிசைகள் கடல் கடந்த நாடுகளாகிய இலங்கை, பர்மா, மலாயா, அந்தமான் - நிக்கோபார்த் தீவுகள், சுமத்ரா, ஜாவா, இந்து-சீனா ஆகிய தென்கிழக்காசியப்பகுதிகளிலும் பரவியிருந்தன. அந்நாடுகளிலெல்லாம் பாண்டியர் தங்கள் மீன்கொடியையும், சோழர் தங்கள் புலிக்கொடியையும் நாட்டி, ஆட்சியும் வாணிகமும் கலையும் பரப்பியிருந்தனர்.

கிழக்கே சென்ற கை மேற்கேயும் செல்லத் தவறவில்லை. சேரரும், பாண்டியரும், சோழரும் மாலத்தீவங்கள், இலக்கத் தீவங்கள், கடம்பர் மூலதளமான வெள்ளைத்தீவு, யவனர்நாடு ஆகியவற்றில் தம் ஆணை பரப்பியிருந்தார்கள். அவர்கள் வாணிகமும், தொழிலும், குடியேற்றங்களும் இவ்வெல்லை கடந்து, கிழக்கே சீனம், சீயம் (சயாம்) நாடுகளையும், மேற்கே சிந்துவெளி, ஏலம், சுமேரிய நாகரிகங்கள், பாபிலோனியா, அஸிரியா, பாலஸ்தீனம், எகிப்து உரோமகம் ஆகிய நாடுகளையும் அளாவி ஒளி வீசினன். கவிஞர் பாரதியாரின் சொற்கள் இவற்றையும் சுட்டிக்காட்டுகின்றன.