பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13 13

ஒரு புது நிகழ்ச்சியாக, அந்தப் புகழின் புதுமலர்ச்சியையும் நாம் அருகருகே வரலாற்றில் காணலாம். தமிழகம் இன்று உலகின் புதுவாழ்வில் பங்குகொள்வதுடன் அமையவில்லை. உலகுக்கு ஒரு புது வாழ்வும் புது மலர்ச்சியும் உண்டுபண்ணும் வகையில் அது தன் பழம் புகழைப் புதுப்பிக்க முனைந்துள்ளது. அதுவே தமிழகத்தின் உள்ளேயும் அதற்கு வெளியே அகல் உலகிலேயும் இன்று நாம் காணத் தொடங்கியிருக்கும் இரு திசைப்பட்ட மறுமலர்ச்சித் துடிப்பு ஆகும்.

தமிழகத்தின் வரலாறு இவ்வகையில் தமிழகத்தில் பற்றுடைய தமிழர்க்கு மட்டுமின்றி, புதிய உலகில் பற்றுக் கொண்ட உலக வாணருக்கும் தனி முக்கியத்துவம் உடையதாகும். வருங்காலத் தமிழகத்துக்கு எச்சரிக்கை தரும் முறையில் அது பண்டைப்புகழ் நலிந்த வகைகளையும் காட்ட வேண்டும். வருங்காலத் தமிழகத்துக்கும் உலகுக்கும் ஊக்கம் தந்து புதுவழி காட்டும் முறையில், அப்பழம்புகழ் அழியாது நீடித்து நின்ற வகைகளையும், அதன் நலிவிடையே உள் விரவி எழுந்து வளர்ந்து வரும் புதுமலர்ச்சியின் வளர்ச்சிகளையும் நன்கு எடுத்துக் காட்டவேண்டும். இவ்விரண்டுக்கும் மூலாதாரமாக உலகம் நெடுநாள் மறந்துவிட்ட, சிற்சில சமயம் உலகின் கண்களிலிருந்து மறைக்கப்பட்டுவிட்ட, அப் பழம்புகழின் பண்பையும், அளவை யும் நாம் ஆராய்ந்து மதிப்பிட்டுக் கணித்தறிவது இன்றியமையாத முதற்படியாகும்.

தமிழர் தேசியம், அண்மையில் தன்னுரிமையும், தன்னாட் சியும் பெற்ற தமிழகம் இதில் முனைந்து முன்னேறும் பெரும் பொறுப்புடையது.

தமிழர்தம் பழைய வாழ்வை உள்ளவாறறிய விரும்புகிறவர் களுக்குத் தமிழ் இலக்கியம் பொதுவாக ஒரு திரையிட்ட பல கணியாய் உதவுகிறது. சங்க இலக்கியம் இத்திரையின் ஒளியார்ந்த பகுதியேயாகும். ஆனால், காணும் கண்ணொளிக்கு விளக்கமாகப் பழமை ஒளி வந்து திரையில் கூடும் பகுதி புறநானூறே எனலாம். அது தொடர்ச்சியுடைய ஒரே வீர காவியமல்ல; ஆனால், தமிழர் வீர காவியங்களுக்கெல்லாம் அதுவே தலையூற்றி என்னலாம். தமிழர் வீரகாவியங்கள் பலவற்றின் சிறு வண்ணப் படிவங்களின் தொகுதியாக அது விளங்குகிறது.