66
அப்பாத்துரையம் – 16
பண்பாட்டுக்கு ஊறு செய்யும் ஒரு நோயுறுப்பாகவே அது ஓரக் கண்ணால் பார்வையிடப்படுகிறது. இந்நிலையில் அதன் வரலாறு வகுக்கப்படாதிருப்பது மட்டுமல்ல குறை; வகுக்கப்படுவதற்குத் தடங்கலான பண்புகளே வளர்க்கப்படுகின்றன. கிட்டத்தட்ட ஆங்கில ஆட்சித் தொடக்கம்வரை இருந்ததாகத் தெரியவரும் தமிழிலக்கியக்கடலின் பெரும்பகுதி, அயல் பண்பாட்சியினரின் ஆதிக்கத்தால் அணிமைக் காலத்திலேயே அழிந்துள்ளதாக, இன்னும் அழிந்துவருவதாக அறிகிறோம்.
தமிழர் வரலாற்றுணர்வு
தமிழினத்தார் உண்மையில் வேறெந்த இனத்துக்கும் அணிமை வரை ஏற்படாத வரலாற்றுணர்வு மட்டுமன்றி, நில இயலுணர்வும், அறிவியலுணர்வும் உடையவராயிருந்தனர். இதனைத் திரட்டுருவிலும், துண்டுத்துணுக்கு வடிவிலும் நமக்கு இன்று கிடைத்துள்ள இலக்கியமும் கல்வெட்டுகளுமே காட்டப் போதியன. உண்மையில் கல்வெட்டுகள் ஏராளமாயுள்ள பிற்காலத்தின் வகையில் நமக்குக் கிடைக்கும் வரலாற்றொளியை விட, சங்ககாலத்துக்கு அதன் துண்டுத்துணுக்கு இலக்கியத்தால் கிடைத்துள்ள ஒளியே பெரிது. ஏனெனில் கல்வெட்டுகள் தற்செயலாகவே நமக்கு வரலாற்றுக்கு உதவுகின்றன. அவை கிட்டத்தட்ட அத்தனையும் கோயில்களுக்கும் கோயில் குருக்கள் மார்களுக்கும் மன்னர் கொடுத்த மானியங்கள் பற்றியவைகளே. ஆனால், சங்க இலக்கியம்- மன்னர்கள், ஆட்சி முறை, போர்கள், மக்கள் கருத்துகள், வாழ்க்கைச் சூழல் ஆகிய எல்லாத் துறைகளிலுமே பரவியுள்ளன. அது போன்ற வாழ்க்கை இலக்கியத்தை, வரலாற்று நோக்குடைய அறிவியல் நோக்கு வாய்ந்த இலக்கியத்தை நாம் உலகில் வேறு எங்கணுமே காண முடியாது.
சங்க இலக்கியத்தில் அந்நாளைய பாண்டியரைப் பாடும் புலவர்கள் அவர்கள் தொலை முன்னோனாகிய நெடியோன் புகழைச் சுட்டிக்காட்டியுள்ளனர். சேரநாட்டில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாடும் புலவர் ஒருவர் அவன் முன்னோரை மட்டுமன்றி மூவேந்தருக்குமே சிறப்புத்தரும் புகழ் வாய்ந்த நெடியோனையும் சுட்டி அவன்போல வாழ்வாயாக என்று வாழ்த்துகிறார். மாமூலனார், பரணர் போன்ற பழம்