இலெமூரியா அல்லது குமரிக்கண்டம்
57
இலெமூரியர்களிடை எழுத்துப் பயிற்சி திருத்த அமையப் பெற்றிருந்தது. அவர்கள் எழுதியவை எல்லாம் பெரும்பாலும் அவர்களறிந்த அறிவியல் செய்திகளே.
தம் நாடு அழியக்கூடும் என்பதை அறிந்த அவர்கள் தமது நெடுநாளைய வாழ்க்கையின் மெய்ப்பயனாகிய அறிவியல் உண்மைகளை என்றுமழியாது பதிவு செய்ய எண்ணி உலகப் பேரழிவு நேரினும் அசையா உறுதி கொண்ட கட்டுப்பாடுடைய தங்கள் கோயில்களின் சுவர்களில் அவற்றை எழுதி வைத்தனர்.
இவற்றிலிருந்து அவர்கள் எதிர்கால நிகழ்ச்சிகளை அறிந்து, பின்வருகின்ற தலைமுறைகட்குத் தமது அறிவைப் பயன்படுத்த விரும்பினர் என்பது நன்கு விளங்குகிறது.
அவர்களைப் பற்றிய எழுத்துச்சான்றுகளில் சிறந்தது கிலமத் அருவியின் பக்கம் கிலமத் ஏரியைச் சுற்றி எழுதப் பட்டவையே. இவற்றை வாசிக்க இவற்றின் ஒலிக் குறியீடு இன்னும் புலப்பட வில்லை. ஆயினும் வேறு இலெமூரியர் எழுத்து வகைகளுடன் இஃது ஒத்தே காணப்படுகிறது.
போரில் இலெமூரியர் வில் அம்பு இவற்றை மட்டுமே திறமையுடன் பயன்படுத்தினர் என்று தெரிய வருகிறது. அவர்கள் தற்கால மக்களைப் போல் அழிவு வேலையில் அத்தனை கருத்துச் செலுத்தாமல் ஆக்கவேலையில் மட்டுங் கருத்துச் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
இலெமூரியர்களிடையே கொடுக்கல் வாங்கல் முறையிலும் நாணயம் வழங்கப்பெறவில்லை. உழைப்புக்கு ஊதியம் ஆவ தெல்லாம் பொது உணவு, உடை இவற்றுட் பங்கேயன்றி வேறில்லை. தம்மிடம் கிடையாத பொருள்களை மட்டும் வேறுபுலத்தவரின் பொருள்களுடன் அவர்கள் பண்டமாற்றுச் செய்து கொண்டனர்.
கலைப்பயிற்சி வகையில் அவரவர்க்குப் பிடித்த கலையை அவரவர் மேம்படுத்திக்கொண்டு போக எல்லா வகை உதவியும் செய்யப்பட்டது. கலைத் தொழிலாளர் பிழைப்புக்குக் கலையை எதிர்பார்த்திருக்கவிட்டுக் கலையின் வன்மை, உயர்வு முதலியவற்றைத் தற்காலத்தவர்போல் அவர்கள் கீழ்ப்படுத்த வில்லை. அறிவுத் துறையிலுள்ளவர்க்கும் இதே வகையில் உணவுக்கும், ஏற்பாடுகள் செய்யப்பட்டன.