பக்கம்:அப்பாத்துரையம் 3.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரித்திரம் பேசுகிறது

99

சமற்கிருதம் கங்கை நாட்டில் கி.பி. 3 ஆம் நூற்றாண்டிலிருந்து உருவாகி கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் இலக்கிய வடிவம் பெற்ற பண்பட்ட மொழியின் பெயர் ஆகும். ஆனால் அது சில சமயம் பாணினிக்கு முற்பட்ட காலத்துப் புராண இதிகாச மொழிக்கும் அதற்கும் முற்பட்ட வேத மொழிக்கும் சேர்த்து வழங்கப்பட்டு விடுகிறது. மூன்றும் தொடர்புடைய மொழிகளானாலும், ஒரே சொல்லால் மூன்றையும் வழங்குவதனால் குளறுபடி ஏற்படுவது இயல்பு. ஆனால் இந்தக் குளறுபடி சமற்கிருதப் பற்றாளருக்கும், ஆரிய இன எழுச்சியாளருக்கும் சாதகமாயிருப்பதனால், அதை யாரும் கண்டுகொள்வதில்லை.

சமற்கிருதத்துக்கு இலக்கிய இலக்கணப் பெருமை உண்டு. பழமை, சமயச்சார்பு இரண்டும் கிடையாது. புராண இதிகாச மொழிக்கு ஓரளவு சமயச்சார்பு உண்டு. பழமையோ இலக்கிய இலக்கணப் பெருமையோ கிடையாது. வேதமொழிக்குப் பழமைச் சிறப்பு உண்டு. இலக்கிய இலக்கணப் பெருமை கிடையாது. சமயச் சார்பிலும் இந்திய பொது மக்களின் சமய வாடையே அதில் இல்லை.

தவிர, சமற்கிருதம் தமிழைப் போன்ற சொல்வளமுடைய மொழி. புராண இதிகாச மொழியில் இது குறைவு. வேதமொழி இன்னும் குறைபட்டது.

மூன்று மொழிப் பெயரும் ஒன்றாகக் கூறுவதால் ஆரிய இன எழுச்சியாளருக்குத் தம் மொழியாக ஒரே மொழிக்கு மூன்று பெருமையும் தரமுடிகிறது. அழகுடையவள், அறிவுடையவள், நல்லவள் என்ற மூவேறு சிறப்பும் கொண்ட மூன்று அணங்குகளின் சிறப்பு வேறு, மூன்றும் ஒருங்கே உடைய ஒரே அணங்கின் சிறப்பு வேறு.

தவிர, சமற்கிருதம் பாளி பாகதங்களுக்குப் பிற்பட்டது. சமற்கிருத இலக்கியம் தமிழ்ச் சங்ககால இலக்கியத்துக்கும் திருக் குறளுக்கும் மிகவும் பிற்பட்டது. மூன்றையும் ஒரு மொழியாகச் சொல்வதன் மூலமே மூன்றும் ஒன்றான அம்மொழி தமிழை ஒத்த பழமையுடையதென்றும், இலக்கியப் பண்புடையதென்றும், தமிழைப்போலவே மக்கட்சமயச் சார்புடைய தென்றும் இரண்டாயிர ஆண்டுகளாக மக்களையும் அறிஞரையும்,