130 ||
அப்பாத்துரையம் - 3
நகர வாழ்வு எவ்வளவு நீடித்த ஒன்றாய் இருந்தாலும் தமிழருக்குத் தனிச்சிறப்புத் தரும் வாழ்வு அதுவன்று, தமிழரின் மிகப் பழங்காலப் பண்பும் அதுவன்று.
கடலடுத்து மலை, மலையடுத்துக் கடல்! இவ்வாறு இன்றும் அமைந்துள்ளது மலையாள நாடு. பண்டைத் தமிழகம் முழுதும் இவ்வாறே அமைந்திருந்தது என்று ஆசிரியர் மறைமலையடிகளார் கருதுகின்றார். பண்டைத் தமிழகம் ன்றைய குமரிக்குத் தெற்கே நெடுந்தொலை பரவியிருந்தது. அதன் நடுவில் அமைந்திருந்த பாலைவனத்தின் வடகோடியே இன்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் தென்கோடியாயுள்ளது. இதைச் சுற்றிலும் தமிழர் நானிலங்களில் வாழ்ந்தனர்.
நிலத்துக்கு நிலம், நாட்டுக்கு நாடு தமிழர் பாலைவனத்தை ஒட்டகை மீது சென்று கடந்தனர். ஆனால் பாலைவனத்தைக் கடப்பதைவிட, கடலைச் சுற்றிச் செல்வது, அவர்களுக்கு எளி தாயிருந்தது. எனவேதான் குறிஞ்சி நில வாழ்வுக் காலத்திலேயே அவர்கள் நெய்தல் வாழ்விலும் ஈடுபட்டனர். கடல் செலவும் பாலைச் செலவுமே தமிழர் நாடுவிட்டு நாடு செல்லும் தலை நெறிகளாகத் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் வருணிக்கப்படுகின்றன.
நகர் ஏற்படுவதற்குள் நகருக்குப் போட்டியாகத் துறைமுக வாழ்வு எழுந்தது. நாட்டுக்கு ஓர் உள்நாட்டு நகர் மருத நிலத்தில் அமைந்ததுபோல, துறைமுக நகர் என்ற ஒன்று கடற்கரையிலும் அமைந்தது. இதுவே 'பட்டினம்' என்ற தமிழ்ச் சொல் குறிக்கும் பொருள். இத்தகைய ஒரு சொல் உலகின் வேறெம்மொழியிலும் இல்லை. கட்டு மரம், ஓடம், வள்ளம், பரிசல், படகு, தோணி, மரக்கலம், கப்பல் முதலிய நீர்ப்பரப்புக் கடக்கும் கலங்கள் தோன்றின. மீனும் உப்பும், முத்தும் சங்கும், கடற்பாசியும் கடல் நுரையும், வாணிக வளமும் கடலாட்சி வளமும் நாட்டுச் செல்வத்தில் பெரும் பகுதியாய் வளர்ந்தன.
தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் கடல் வாழ்வும் கப்பலும் பற்றிய செய்திகள், உலகில் வேறெம்மொழி இலக்கியத்திலும் அணிமைக் காலத்தில்கூடக் காணப்பெறாத அளவில் பெரு வழக்காகவும், பொதுமுறை வழக்காகவும் உள்ளன. மன்னனைப் புகழ்ந்த புலவர் நாட்டின் பிற வளங்களைவிட