மொழியின் தனிப்பெருந்தகுதியைக்கூடத் தமிழனின் தன் மதிப்பற்ற அவலநிலை கெடுத்துள்ளது, கெடுத்து வருகின்றது.
உயர்தனிச் செம்மொழியாகிய தன் மொழியை உலகில் ஆதரவற்ற நிலையில் விட்டுவிட்டு, சமற்கிருதத்தை உயர்தனிச் செம்மொழியாக ஏற்கும்படி தமிழகத்திலேயே ஆரிய இன எழுச்சியாளர் தமிழனை வற்புறுத்துகின்றனர். தமிழ்மொழியின் உரிமைகளை அதற்குப் பலியிடும்படி ஓயாது தூண்டுகின்றனர், தூண்டி வருகின்றனர். நீண்டகால அடிமைத்தனத்தின் காரணமாகத் தமிழகத்தில் பிறமொழிச் சார்பாளர், பிற னப்பற்றாளர்கள் கையிலேயே அரசியல், சமுதாய ஆட்சி, செல்வர் ஆதரவு, பத்திரிகைகள், திரைப்படம், வானொலி முதலிய எல்லாப் பொது நிறுவனங்களும் சென்று சேர்ந்துள்ளன.
தமிழன் பழந்தகுதி! அவன் இன்றைய அவலநிலை! தமிழன் பண்டைய செயல்வீறார்ந்த உயர் வாழ்வு! அவனது இன்றைய செயலற்ற,உரிமையற்ற நிலை! இந் நிலையை துடைத்தழிக்கத் தமிழ்ப் பற்றுடையோர் எல்லா வகைத் தியாகங்களும் செய்ய வேண்டும், எல்லா வகை உழைப்பும் ஆற்ற வேண்டும் சிறப்பாக உலக மக்கள் கவனம் தமிழகத்தின் பட்டப்பகல் அநீதிகள், இன ஓரவஞ்சக ஆட்சி ஆகியவற்றின் மீது செலுத்தப்பட வேண்டும். உலக மக்கள் ஒத்துணர்வு இல்லாமல் தமிழன் தனக்கெதிராகச் சூழ்ந்து வரும் ஆரிய இன எழுச்சிச் சூழலிலிருந்து மீள முடியாது.
தமிழகம் சுதந்திரம் அடையும்வரை, தமிழினம் தமிழகத்துடன் தொடர்புகொள்ள முன்வரும் வரை, கடல் கடந்த தமிழருடன் தமிழன் மொழித் தொடர்பு கொள்ளும் உரிமை பெறும்வரை தமிழக அரசியல் தமிழர் நலங்களை, தமிழர் அவா ஆர்வங்களையே உணர்வது அருமை! தமிழ்ப் பண்பு கெடாது மீந்துள்ள செல்வர் குழாங்கள், நிலையங்கள், கட்சிகள் ஆகியவைகளே அரசியலை மட்டுமன்றி, தமிழகத்தின் தமிழ்ப் பண்பற்ற சமய, சமுதாய, அறநிலையங்களைக்கூட எதிர்க்க வேண்டி வரலாம். ஆனால் தமிழன்பு ஒரு சிறிது உடைய தமிழர் அந் நிலையங்களில் உள்ள வரை, தன்னலத்திலும் மிஞ்சிய இன நலமுடைய தமிழர் ஆதரவு அவற்றுக்குத் தேவையாயிருக்கும் வரை போராட்டம் அன்புப் போராட்டமாகவே இருத்தல் நலம்;