1. மொழி வாழ்வும் நாகரிகமும்
காலமும் இடமும் கடந்த மெய்ப்பொருள் கடவுள் என்பர் சமயவாணர். ஆனால், அது மனித வாழ்வும் கடந்தது. அறிவுக்கும் உணர்வுக்கும் எட்டாதது. மனித வாழ்விலேயே, நிலைத்த மெய்ப்பொருளாகவும் இயங்கு பொருளாகவும் மற்றொன்று உண்டு. அதுவே மொழி.
மனித வாழ்வுக்குக் கடவுள் வழங்கிய “தூதுரை” என்று சமயவாணர் தத்தம் வேதங்களை முழங்குவர். மொழி வாழ்வு உலகுக்கு அளிக்கும் படிப்பினைகளுக்கு இக்கூற்று முழுக்க முழுக்கப் பொருந்துவதாகும். ஆனால், உருவிலாக் கடவுள் அருளிய வேதங்கள் உருவுடையன. உருவும் இயக்கமும் வளர்ச்சியும் உடைய மொழி அருளும் படிப்பினைகள் உருப்படுத்திக் காண வேண்டியவை ஆகும். எனினும், காலமும் இடமும் கடந்த மொழி வாழ்வின் படிப்பினைகள் காலத்தின் ஒரு கணப்போதில் வாழ்ந்து, எல்லையற்ற இடத்தின் ஓர் அணுவில் அணுவாக இயங்கும் சிற்றியல்புடைய மனிதனுக்கு, எல்லையற்ற கடவுட் பண்பையே திறந்து அளிக்கும் கடவுட் கருவூலமாய் அமைந்துள்ளது என்னலாம்.
தமிழர் தம்மொழியைச் சாவாமூவா மொழி என்றும் ளமைநலம் வாய்ந்த கன்னித்தாய்மொழி பொங்கலின் பொங்கு மா வளம் கொண்ட மொழி என்றும் குறிப்பது வெறும் புனைந்துரை, அழகுரையே என இன்று பலர் கருதுகின்றனர். இஃது இன்றைய உலகின் மேற் புல்லறிவையும் அதிலும் தமிழனின் கடைப்பட்ட நிலையையுங் குறிக்கின்றதன்றி வேறன்று. உண்மையில் மொழிதரும் படிப்பினைகளைப் பின்பற்றி. அவற்றின் மூலம் தம் மொழிக்கும் அதன் வாயிலாக மனித இன மொழிகளுக்கும் தமிழினம் ஊட்டி வந்த, ஊட்டி வருகிற சாவா