பக்கம்:அப்பாத்துரையம் 3.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. இயல் நூல் வளர்ச்சி

மனித இன வாழ்வில் வளமும், வள ஆர்வமும் ஊட்டுவது கலை. அதற்கு உதவுவது தொழில். மனித இனவாழ்வின் பின்னணியாகிய இயலுலகினையும் அதன் ஆற்றல்களையும், அவற்றின் தொடர்புகளையும் உணர வகைகாண்பவை அறிவு நூல்கள்.

மனிதன் இயலறிவில் மூன்று இயல்பான படிகள் உண்டு. முதலது பொது அறிவு. இது சூழலாலும் இன மரபாலும், சமுதாய மொழி வாழ்வாலும் ஏற்படும் நாகரிக அறிவேயாகும். அடுத்தது பகுத்தறிவு. இது பொது அறிவின் ஒப்பீட்டால் பொய்ம்மை, மெய்ம்மை வேறுபாடு கண்டு, மெய்ம்மையின் கூறுகளை நுணுகி நோக்கி,மெய்ம்மையை இயக்கும் மெய்ம்மை களான வாய்மைகளை உணர்கிறது. மூன்றாவதுபடி மெய்யறிவு. பகுத்தறிவு நுணுகிப் பிரித்துக் கண்டதனை ஒன்றுபட வைத்துப் பரவலான முழுஉண்மையை, வாய்மையின் வாய்மையை உணரும் முயற்சியே அது.

பொது அறிவு வளர்ப்பவை கலைகள், இலக்கியம். பகுத்தறிவை வளர்ப்பது இயல் நூல் துறைகள் அல்லது விஞ்ஞானம். மெய்யறிவு காண்பது மெய் விளக்கத் துறை அதாவது தத்துவ நூல், (பிலாசபி). சமயங்கள் உண்மையில் சமுதாய அரசியல் கட்டுப்பாடுகட்கு இடந்தந்துள்ள தத்துவ நூற் கோட்பாடுகளே.

இயல் நூல் மக்கள் வாழ்விலும், சமுதாய அரசியல் பொருளியல் துறைகளிலும் பேராற்றல் பெற்ற உலகை ஆட்டிப் படைத்து வருவது சென்ற நான்கு நூற்றாண்டுகளுக்குள்ளாகவே தான். இதற்கு முன் விஞ்ஞானம் இருந்ததில்லை; புத்தம் புதுவதாக அண்மையில் தோன்றிய ஒன்றே அஃது என்ற