பக்கம்:அப்பாத்துரையம் 3.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. தமிழர் குடியாட்சி

உலகில் குடியாட்சியின் தோற்ற வளர்ச்சி வரலாறுகளைக் 'குடியாட்சி' என்ற தமிழ்ச் சொல்லே சுட்டிக் காட்டுவதாய் உள்ளது.

குடியாட்சி முந்தியதா, முடியாட்சி முந்தியதா என்று நாம் ஒருவரைக் கேட்டால், மிகப் பெரும்பாலோர் சட்டென்று முடியாட்சிதான் முந்தியதென்று கூறிவிடுவர். ஏனெனில், பல நாடுகளில் முடியாட்சியை எதிர்த்தும் சில நாடுகளில் அதை வீழ்த்தியுமே, குடியாட்சி தோன்றி வளர்ந்துள்ளது.

குடியாட்சி நம் கால, இக்காலப் பண்பு; முடியாட்சி பழங்காலப் பண்பு, என்றுகூட மிகப் பலர் எண்ணுவர்.

இக்கருத்துகள் முழுதும் உண்மையல்ல.

பண்டைக் கிரேக்கரிடையே பல குடியாட்சிகள் இருந்தன. அலெக்சாண்டர் என்ற முடியரசனால் அவை அழிக்கப்பட்டன.

அவை அடக்கி

உரோம் நாட்டில் குடியாட்சியை ஒழித்தே ஜூலியஸ் சீசர் புதிய முடியாட்சிப் பேரரசை நிறுவினார்.

பண்டைய சிந்து கங்கை வெளியில் குப்தர்களுக்கும் மௌரியர்களுக்கும், நந்தர் சிசுநாகர்களுக்கும் முன்பிருந்தே பல குடியாட்சிகள் நிலவியிருந்தன.

பண்டைத் தமிழகத்தில் சங்க காலங்களில் மூவரசர் ஆட்சியெல்லைக் குள்ளாகவும் புறம்பாகவும் வேளிர் அல்லது குடியரசுத் தலைவர்கள் இருந்தனர்.

இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகில் முடியாட்சிகளைவிடக் குடியாட்சிகளே மிகுதியாய் இருந்தனவென்றால் தவறில்லை.