பக்கம்:அப்பாத்துரையம் 3.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

அப்பாத்துரையம் - 3

மொழியாட்சி ஏற்படுத்தி வரும் செய்தியிதழ் உலகே, தமிழையும் பிற இந்திய மொழிகளையும் அவ்வடியை நோக்கித் தள்ளும் கருவியாக இன்று இயங்கி வருவதாகும்.

'தமிழ்நாடு' போன்ற ஒரு சில நாளிதழ்களே இந்நிலை போக்கப் பாடுபட்டு வருகின்றன. அவை தமிழ்க்கு மட்டுமின்றி இந்தியாவுக்கும் உலகுக்குமே புது வழிகாட்டி வளர்தல் வேண்டும்.

உலக மறுமலர்ச்சிக்கே உதவத்தக்க கருவூலங்கள் தமிழ் இலக்கிய இலக்கணங்கள். சங்க இலக்கியத்தின் ஒவ்வொரு கூறும் மட்டுமன்றி அதற்கு முற்பட்ட பிற்பட்ட இலக்கியங்களின் பகுதிகள், தமிழக மறுமலர்ச்சிக்கு உதவுவன. இவற்றைப் புலவர் வாயிலாகப் பொது மக்கட்கு அறிவுறுத்துவதுடன், பிறமொழி அறிஞர் வாயிலாக ஒப்பிடும் முறையில் உலகத்துக்கும் தமிழகத்துக்கும் உணர்த்தும் பொறுப்பு செய்தியிதழ்களுக்கு உண்டு, தமிழ் இலக்கியத்தைப் பழம் புராணம் எனக் கருதிப் பழம் புராணங்களில் கருத்துச் செலுத்தும் பல தமிழ், தமிழகக் கீழ்த்திசைப் பத்திரிகைகளின் போக்கு இவ்வகையில் மாறுதல் வேண்டும். மேலை உலகப் பண்பாடு, தற்கால உலக இலக்கிய அறிவுடன் அறிவாக, தமிழிலக்கிய ஆராய்ச்சி புது அடிப் படையில் வளர்க்கப்படுதல் வேண்டும்.

தமிழில் புத்திலக்கியம் ஆக்கும் பணியில் தமிழகச் செய்தியிதழ்கள் மற்ற மொழி இதழ்கள் போலவே ஊக்கம் காட்டி வருகின்றன. ஆனால், புத்திலக்கியம் முற்றிலும் தானாக ஏற்பட்டுவிட முடியாது. உலக இலக்கியக் கருத்தாய்வுரை, தக்க இடங்களில் திறம்பட்ட மொழிபெயர்ப்பு, ஒப்பீடு ஆகியவை தனை ஊக்கும்.

அறிவியல் ஆய்வு, கலை ஆய்வு, மக்கள் சமுதாய சமவாழ்வுகள் ஆகியவற்றில் இன்றைய கீழ்த்திசைச் செய்தி இதழ்கள் உரிய கவனம் செலுத்த வில்லை என்றால் மிகையாகாது. அரசியலும், ஆட்சி வகுப்பினர் செய்திகளும் மட்டுமே இன்றைய முதன்மையான செய்தித்தாள்களில் இடம் பெறுகின்றன. தமிழ்ப் புலவர், அறிஞர், தமிழகத் தொண்டர் பணிகளில் கட்சி மதச் சார்பின்றிச் செய்தித்தாள்கள் மிகுதிக் கவனம் செலுத்துதல் வேண்டும்.