21. கலைவளம்
(தமிழ் எழுத்தாளர் சங்க மாநாட்டில் நிகழ்த்திய தலைமையுரை)
உலக நாகரிகத்தின் முன்னோடிகள் தமிழர்கள் என்று வரலாறுகளும் ஆராய்ச்சித் துறைகளும் முழங்குகின்றன. மனித நாகரிகத்தையும். பண்பாட்டையும் ஆக்கிய தாயகம் தமிழகம். அத்தமிழகத்தின் பண்பின் முன்னோடி, அதன் தலையூற்று தமிழ்க்கலை - தமிழிலக்கியம்!
தென்னகத் தமிழகத்திலேயுள்ள பல்வேறு அமைப்புகள் கடல் கடந்த ஈழத் தமிழகம், மலாயத் தமிழகம், பர்மியத் தமிழகம், ஆப்பிரிக்கத் தமிழகம் முதலிய பல்வேறு மாநிலங் களிலுள்ள தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் எழுத்தாளர் சங்கங்கள், அவற்றுளெல்லாம் பரந்து தமிழ் வாழ்வின் நரம்பாய் இயங்கும் நம் சங்க உறுப்பினர்கள், பிற எழுத்தாளர்கள், தமிழ்த் தலைவர்கள், தமிழர் ஆகியோர் தாயகத்தின் வளர்ச்சியில் கருத்தூன்றி, அதில் ஆர்வப் பங்கு கொண்டு நம் சங்கத்தின் நடவடிக்கைகளைப் புத்தார்வத்துடன் எதிர் நோக்கிய வண்ணம் உள்ளனர்.
சங்கத் தமிழின் மங்காத தங்கப் புகழ் வளம் நம் கலைவளம். அகல் பேருலகில் உள்ள நூற்றுக்கணக்கான மொழிகளுள் வேறெம் மொழியிலும் இல்லாத அளவில் மனித இனத்தின் மழலை இளமைக் காலத்திலிருந்து தொடங்கி முப்பது நூற்றாண்டுகளுக்கு 'மேற்பட்ட' தொடர்ச்சியான லக்கியம் நம்மிடம் உண்டு. அது சிறப்பான வகையில் தேசிய இலக்கியம், நம் தேசிய இலக்கியம். அதே சமயம் அதுவே உலகளாவிய பண்பார்ந்த மனித இன இலக்கியமாகவும் திகழ்கிறது. அது தனிப்பட்ட முறையில் சமுதாயத்தைச் சாராத வாழ்க்கை இலக்கியமாக, மக்கள் இலக்கியமாக இயங்கியுள்ளது. அதே சமயம் உலகில் இன்று நிலவும் எல்லாச் சமய