சரித்திரம் பேசுகிறது
45
தொடர்பு ஆகும். கி.மு. 3000-க்கு முன்னிருந்தே தொடங்கி, வரலாற்றுக்கு முற்பட்ட காலம் கடந்து தமிழகத்துக்கும் எகிப்து, பாலஸ்தீனம், ஃபினிஷியா, இவற்றுக்கெல்லாம் முற்பட்ட சுமேரிய நாகரிகம், சிந்துவெளி நாகரிகம் ஆகியவற்றுக்கும் வாணிகத் தொடர்பு, குடியேற்றத் தொடர்பு ஆகியவை மட்டுமன்றி, நாகரிகத் தொடர்பும் இருந்தது என்று எல்லா ஆராய்ச்சியாளரும் ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் இத்தொடர்பு கூட்டுறவுத் தொடர்பல்ல. அதனினும் அடிப்படை யானது என்பதில் ஐயமில்லை. மொழி, இடப்பெயர், ஊர்ப்பெயர், இனப்பெயர்,பண்பாடு, பழக்க வழக்கங்கள் ஆகிய எல்லாவற்றிலும் இதைக் காண்கிறோம். உண்மையில் நடுநிலக் கடலக இனமும் திராவிட இனமும் ஒரே பேரினம் என்று சில ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். அவை ஒரே இனமாய் இராவிட்டால் கூட, ஒன்றுபட்ட இன நாகரிங்கள் என்பதில் ஐயமில்லை.
நடுநிலக் கடலக இனமும் தென்னாடும் மட்டுமல்ல; வரலாற்றுக்கு முற்பட்ட நாகரிக உலகம் முழுவதுமே ஒரே கருமூல இனத்தின் நாகரிக அடிப்படையிலேயே வளர்ந்தது என்று கூறலாம். வரலாற்றுக் காலத்திலும் நாகரிக உலகில் இதுவே அடிப்படை யினமாயினும், ஆரிய இனம் மற்றொரு துணை அடிப்படை இனமாகப் பரந்து, ஆட்சியில் பல பகுதிகளில் முதன்மை பெற்று விட்டது.
நடுநிலக் கடலக நாகரிகம் வேறு, திராவிட நாகரிகம் வேறு. சீன, தென்கிழக்காசிய நாகரிகங்கள் வேறு என்ற கருத்தே இன்று ஆராய்ச்சியாளர் 'கொள்கை' யாக இருந்துவருகிறது. அவற்றின் வேறுபாடு தனித்தனி வளர்ச்சி சார்ந்தது, அடிப்படை ஒன்றே என்பதை வருங்கால ஆராய்ச்சிகளே தெளிவுபடுத்த வல்லன. ஆனால் அவற்றின் ஒற்றுமை இன்றும் இக்கருத்தை வலியுறுத்தப் போதியன.
தற்கால உலகில் தமிழினத்தின் இத்தொடர்புகள் ஆராய்ச்சி உலகத்தில் பூட்டி வைக்கப்பட்டுவரலாற்றின் கேளாக் குரல்களாக உள்ளன.