52
அப்பாத்துரையம் - 3
சிலை உருவில்! அழகும் கவர்ச்சியும் மிக்க பெண் தலை, சிங்கத்தின் உடல்! சிலை அளவில் அல்ல; மலை அளவில், மலையாகவே பாலைவனத்தில் கிடந்தது. காலத்தின் கலையுருவே போல் கனிவும் சோகமும் கலந்து படிந்த பாவனையில், அது பேச இருப்பதுபோல் பேசாமல் அமைந்துள்ளது.
"உனக்கு முன்னும் நான் இருந்தேன்! என்னை உருவாக்கிய வர்கள் இன்றில்லை. உன்னையும் நான் காண்கிறேன்! உனக்குப் பின்னும் நான் இருக்கத்தான் போகிறேன்!" என்று அது வரலாற்றின் குரலில் கூறாமல் கூறியிருக்க வேண்டும்!
இன்றைய மேலை உலகினர் வியக்கும் கலை, அறிவுவளம் கொண்டவர்கள் எகிப்தியர். இறந்த மன்னர்களின் உடலை அழியாது பாதுகாக்கும் மாயவகையை அவர்கள் அறிந்திருந் தார்கள். அவ்வுடல்கள் இன்னும் அழியாத் தசையுருவுடன் தூங்கின்றன. அவற்றின் உடல்மீது ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்திலிருந்து பெற்ற தென்னாட்டு ‘மல்மல்' ஆடையும் தென்னாட்டு நறுமணப் பொருள்களும் இன்னும் அழியா திருக்கின்றன.
அவ்வுடல்கள்மீது ஐந்நூறு, அறுநூறு அடிக்கு மேற்பட்ட உயரமுள்ள ‘கலைமலைகள்' ‘எகிப்தியக்’ ‘கூர்ங்கோபுரங்கள்’ ‘ஸ்ஃவிங்க்’ஸுடன் போட்டியிட முயல்பவைபோல, காலத்தை நோக்கி நகையாடிய வண்ணம் நிற்கின்றன. அவற்றின் உட்கட்டடப் பகுதியிலுள்ள தேக்குமர வேலைப்பாடுகள் தென்னகத்தின் தொடர்புக்கு அழியாச் சின்னங்களாயமைகின்றன.
எகிப்து, கிரீஸ், மான்க்மேர்!
எகிப்தியர் இயல் நூல் அறிவுக்கு அவர்கள் உலகில் விட்டுச் சென்ற 'மாய எகிப்தியக் கலங்கள்' சான்று பகர்கின்றன. கலம் நிரம்பும்வரை அது நீரேற்கும், நிரம்பியவுடன் நீர் கீழே விழுந்து விடும்! கலத்தை உலகுக்கு அவர்கள் அளித்தனர். தத்துவத்தைத் தம்முடன் கொண்டு சென்று மாண்டனர். நல்ல காலமாக நம் அறிவியலறிஞர் இப்போது தத்துவத்தை உணர்ந்துகொண்டு விட்டனர். இயல் நூலில் அது வளைகுழாய்த் தத்துவம் (Siphon principle) என விளக்கப்படுகிறது.