3. கோபப் புயல்
செம்பாழியோட்டுப் பூவள்ளித் தரவாடு மலையாள நாட்டிலேயே ஈடும் எடுப்புமற்ற செல்வமும் புகழ்மரபும் உடையது. ஆண்டு ஒன்றுக்கு ஏறத்தாழ நாற்பத்தெண்ணாயிரம் பறை நெல் விளையும் நன்செய் நிலங்கள் அதற்கு உரியனவாயிருந்தன. பதினெண்ணாயிரம் வெள்ளிக்குக் குறையாத வருமானம் உடைய தோட்டந்துறவுகளும் இருந்தன. பாட்டக்குத்தகை, ஏரிகுளம், காடு ஆகியவற்றின் குத்தகை முதலிய மேல்வரவினங்களும் குறைவில்லாதிருந்தன.
பல தலைமுறைகளாகத் தரவாட்டின் காரணவர்களும் அவர்கள் பிள்ளைகளும் திவானாகவும் பேஷ்கராகவும் அமைதிக் காவலராகவும் அரசுரிமைக்குத் தகையாளராகவும் இருந்து, வருமானமும் செல்வமும் புகழும் திரட்டித் தரவாட்டை வளர்த்திருந்தனர். காரணவர் பஞ்சு மேனோன் ஆங்கிலப் படிப்பில்லாதவர். எவ்வகைத் திறமையுமற்றவர். ஆகவே வருமானம் செல்வம், புகழ் ஆகியவைகளில் தரவாட்டின் வளர்ச்சி ஓரளவு தடை பட்டிருந்தது. ஆயினும் ஈயாக்கஞ்சனான அவர் வரவினங் களைப் பெருக்க வகை தெரியாதவரானாலும் செலவினங்களைச் சுருக்கி, கிட்டத்தட்ட முன்னிருந்த வளத்தை நீட்டிக்கமுடிந்தது. அத்துடன் அவர் வழக்கமீறிய பழமை விரும்பியதாக இருந்ததால், பழைய மரபுப்புகழ் சிறிதும் குறையாமல் கண்காணிப்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்து வந்தார்.
பெரும்பாலான மலையாளத் தரவாடுகளைப் போலவே பூவள்ளியிலும் செலவினங்களில் பெரும்பகுதி கோயில், குளம், மடம், தர்மசாலை ஆகிய இனங்களையே சார்ந்திருந்தது. குடும்பத்தைச் சார்ந்த பகவதி கோயிலில் மாதந்தவறாதுவிழாக்களும், வாரந்தவறாது சிறப்புக்களும் நாள் தவறாது ஆறுவேளை பூசைகளும் ஆரவாரச் செலவினங்களும் நடைபெற்று வந்தன.