12. கோமாளியின் முதல்நாள் கூத்து
விருந்துண்டு முடிந்தபின் சூரிநம்பூதிரிப்பாடு காலையில் அணிந்த பொன் அங்கியையே திரும்பவும் அணிந்து பஞ்சுமேனவன் மாளிகைக்கு எழுந்தருளினான்.பஞ்சுமேனவன் அவரை அங்கிருந்த உயர்பீடத்திலமர்த்தி அருகில் நின்று முகமனுரைகள் கூறினார். நம்பூதிரியின் மனம் முழுவதும் இந்துலேகாவைப் பார்ப்பதிலேயே இருந்தது. ஆகவே அவன் தானாகவே அப்பேச்செடுத்தான்.
‘இந்துலேகாவின் மாளிகை இதனுடன் இணைந்துள்ளது தானே?' என்று கேட்டான்.
'ஆம். இதன் தென்மேற்குப் பக்கமாகச் சென்றால் அதன் வாயிலைக் காணலாம்,' என்று மட்டும் பஞ்சுமேனவன் மறுமொழிகூறி நிறுத்திவிட்டுப் பின் பேசாதிருந்தார்.
'அப்படியானால் அங்கே புறப்படாலாமே!' என்று சூரி தானாக வலிந்து தன் விருப்பம் தெரிவித்தான்.
இச்சமயம் கேசவன்நம்பூதிரி ஓடிவந்தார்! சற்றுப் பொறுத்துக் கொள்ளுங்கள்.நான்போய் நீங்கள் வருவதாகச் சொல்லி வருகிறேன்!
என்றார்.
கேசவன் நம்பூதிரி வந்ததுகண்ட இந்துலேகா சற்றுப் பர பரப்புடன் எழுந்தாள்
‘என்ன அப்பா? என்ன செய்தி?" என்றாள்.
கே.ந: ஒன்றுமில்லை, இந்து! அவர் உன்னைக்காண வேண்டுமென்று விரும்புகிறார். பெரியப்பாவுடன் இங்கு வரக் காத்திருக்கிறார்கள். கூட்டிக் கொண்டு வரலாமா?
இந்: விரும்புகிறார் என்றால் யார்?