பக்கம்:அப்பாத்துரையம் 31.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்து லேகா

275

நாளளவும் எங்கள் விருந்தினராய் இருப்பதில் தங்களுக்கு மிகுதி இடைஞ்சலாவதும் இல்லையானால். அவ்வாறே இருக்கும்படி உங்களை மனமார அழைக்கிறோம்” என்றார் அவர்.

முன்பின் தெரியாத இடத்தில் கிடைத்த இந்தத் துணைவர்களின் ஆதரவை மாதவன் மகிழ்வுடன் ஏற்றான். அனைவரும் காட்சிமனையின் வாயிலுக்கு அருகே சென்றனர். அங்கே நான்கு முதல் தரமான குதிரைகள் பூட்டிய சிங்காரவண்டி ஒன்று நின்றது. அதிலேறி ஐவரும் கல்கத்தா நெடுஞ் சாலைவழி விரைந்தனர். ஒன்றிரண்டு கல் தொலை சென்றபின் நாற்புறமும் மதில்சூழ்ந்து ஒரு பெரிய பூங்காவின் நடுவே அமைக்கப்பட்டது போன்றிருந்த ஒரு விசாலமான மாடகூட மாளிகை நோக்கி வண்டி ஓடிற்று. அதுவே பாபு கோவிந்தசேன் வாழ்வக மாளிகை என்று மாதவன் அறிந்தான்.

அதன் பெயர் அமராவதி என்பது. அதன் பெயருக்கேற்ப அது ஒரு பொன்னுலக நகரம் போலவே வனப்பு மிக்கதாயிருந்தது.

மாளிகை சூழ்ந்த மனைவெளி பலவகை நிழல்தரும் சாலைகள், பூஞ்செடி கொடிப் பண்ணைகள், வளைந்து வளைந்து பூம்படுக்கைகளிடையே செல்லும் தோட்டப் பாதைகள் ஆகியவை நிறைந்ததாய் இருந்தது. மாளிகையோ பல வண்ணங்களில் இழைத்துப் பளிங்கு போலப் பளபளப்பாக்கப்பட்ட சலவைக் கற்களால் சுட்டப்பட்டு, பல அடுக்கு மாடிகளை உடையதாய் வானளாவிய உயரமுடையதாய் இருந்தது. அதன் உள்ளே சென்று பார்த்தபோது, அது அகன்ற பெரிய கூடங்கள், அறை உள்ளறை பக்க அறைகள் ஆகியவை நிறைந்து ஒரு சிறிய நகரம் போலப் பலவகைக் காட்சிகளும் பரப்பும் உடையதாயிருந்தது.

மேல் தளத்தின் பூவண்ணவேலைகளையும், பல வண்ணச் சர விளக்குகளையும் நாற்புறச் சுவர்களிலும் பதித்திருந்த நிலைக்கண்ணாடிகள் பெருக்கிக்காட்டின. தெய்வங்கள், தேசத் தலைவர்கள் படங்களும் இயற்கைக் காட்சி தீட்டிய ஓவியங்களும் வண்ணக் கலைக் காட்சிகளும் சுவர்கள் எங்கும் நிரம்பியிருந்தன. நிலத்தளத்தில் அடுக்கடுக்காக விரிக்கப்பட்டிருந்த மணிக் கம்பளங்கள், பட்டுக்கள் ஆகியவை நடப்பவர்கள் எல்லாரது நடையையும் அன்னமென்னடையாக்கி யிருந்தன. பலகணிகள், வாயில்கள் எல்லாவற்றிலும் பலநிறக் கண்ணாடிகள்