284
அப்பாத்துரையம் - 31
"மாதவனுக்கு நேர்ந்த இடர்பற்றி வருந்துகிறேன். ஆனால் அதுபற்றி மாதவனுக்குக் கவலை எதுவும் வேண்டியதில்லை. அவர் கணக்காக இரண்டாயிரம் வெள்ளிவரை பொருளகங் களிலிட்டுப் பயணகாலத்தில் வேண்டுமிடங்களிலெல்லாம் எடுத்துக் கொள்ளும்படி கூறுங்கள். அத்துடன் அனுபவமுள்ள நம் ஏவலர் ஒருவரையும் அவருடனே அனுப்பி, சுற்றுப்பயணம் முடிந்து மலபார் செல்லும்வரை உடனிருந்து உதவும்படி செய்யுங்கள். போன பொருள்கள் அகப்பட்டாலும் அகப்படா விட்டாலும், அதன் பொறுப்பு என்னுடையது என்று மாதவனிடம் தெரிவியுங்கள்" என்பது அப்பெருந்தகையின் பதிலாயிருந்தது.
கோபிநாத் பானர்ஜி வந்து கல்கத்தா தந்தியைக் காட்டிய போது மாதவன் தழுதழுத்த குரலில் கோவிந்த சேனையும் பானர்ஜியையும் வாயார வாழ்த்தினான். ஆனால் தன் சுற்றுப்பயணத்தை மேலும் தொடராமல் சென்னைக்கே சென்றுவிட்டுத் திரும்பிவர விரும்புவதாகத் தெரிவித்தான். பானர்ஜி இதை ஒத்துக் கொண்டாலும் நாலைந்து நாட்களாவது தம்முடன் இருக்க வேண்டுமென்றும், அதன்பின் பம்பாய், சென்று அங்கிருந்தே சென்னை செல்ல வேண்டுமென்றும் வற்புறுத்தினார்.
மாதவன் இவ்வன்பு வற்புறுத்தலை மறுக்கமாட்டாமல் அவ்வாறே தங்கிச் செல்ல இணங்கினான்.
பம்பாயில் கோவிந்தப்பணிக்கர் உடல்நோய் ஒருநாள் இரண்டுநாள் என்று நீடித்துக் கொண்டே போயிற்று. இதனால் மாதவனைத் தேடும் பயணமும் தடைப்பட்டே நின்றது. ஒவ்வொருநாளும் பர்மாவுக்கு மறுநாள் புறப்பட வேண்டும். அடுத்த நாள் புறப்படவேண்டும் என்று கழித்துக் கொண்டே அவர்கள் பம்பாயில் தங்கியிருக்க வேண்டியதாயிற்று.
ஒருநாள் கோவிந்தகுட்டிமேனவன் கடற்கரையில் உலாவிக் கொண்டிருந்தார். அவ்வழி தற்செயலாக வந்த கேசவசந்திரசேன் அவரைக் கடந்து சிறிது தொலை சென்றபின், திடுமென ஏதோ நினைத்தவராய் அவரை நோக்கி வந்தார். மாதவனை ஒத்த தோற்றம் அவரிடம் இருப்பதாக அவருக்குத் தென்பட்டது.