பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 4

145

இன்னும் மிகுந்தே இருந்தது. மன்னன் நல்லாட்சி முறையாலும் இளவரசன் நல்லெண்ணத்தாலும் பொதுமக்கள் துணையாலுமே, அப்பழி தற்காலிகமாகவேனும் அமைதியுறலாயிற்று. பின் ஐந்தாம் ஹென்ரி அரசனான இளவரசனது நன் முயற்சி யினளவே அதன் தடையின் அளவாக நின்று, அஃது இரண்டாண்டுக்குப்பின் மீண்டும் எழுந்து ஏழாம் ஹென்ரியின் ஆட்சியிலேயே ஓயலாயிற்று. அதற்கிடையில் அது தனக்கு இரையாகக் கொண்ட குருதி வெள்ளம் மட்டற்றது.

ஷுரூஸ்பரிப் போரில் சேராதிருந்த பகைவர் இருவர். அவருள் முதல்வன் வேல்ஸ் தலைவன் கிளென்டோவர். இவன் ஷுரூஸ்பரிப் போர்க்குப்பின் வேல்ஸ் மலைகளிடையில் பதுங்கிநின்று அடிக்கடி இங்கிலாந்திடம் தன் மருமகன் தோல்விக்குப் பழிவாங்கி வந்தான்.

இதே சமயம் நார்தம்பர்லந்து போர்க்களத்திற்கு நெடுந்தொலைவில் நின்றுகொண்டு போர்நிலையைக் கவனித்துக் கொண்டிருந்தான். கிளர்ச்சிக்காரர் வெல்வது போலிருந்த சமயம் தானுஞ் சென்று சேர்ந்துகொள்ளலாமா என்று அவன் நினைப்பான். அடுத்த நொடி மன்னன் படை முன்னேறுகிறதென்று கேட்டுப் பின்னடைவான். ஒரு சமயம் டக்ளஸின் வீரச் செயல் கேட்டுக் களிப்பான். பின் இளவரசன் எதிர்பாரா வீரங்காட்டினான் என்று மனமுட்குவான். தன் மகன் களந்தூள்பட வாளுழவு உழுகின்றான் என்று கேட்டு இறும்பூது எய்துவான். அவ்விறும்பூதினிடையே, அத்தகைய மகனுக்கு உதவாமல் உயிரை வெல்லமாக வைத்துக் கொண்டிருக்கிறோமே' என்றும் மனம் நைவான்.

இந்நிலையில், ஹாட்ஸ்பரும் இளவரசும் நெடுநேரம் தனிப்போர் செய்கின்றனர் என்று கேட்டான். அதன்பின் ஒரு செய்தியும் வரவில்லை.

பலர் அவ்வழியே போயினும் அவர்களுள் ஒருவரேனும் அவன் முன் வாயிலில் நில்லாமலும், உள்வாராமலும் சென்றனர். அவர்கள் முகமும் நடையும் நற்செய்தி கொண்டு செல்பவராகக் காணவில்லை.

ஆனால், அவரிடம் சென்றுதான் கேட்போமே என்றால் அதற்குந் துணிவு வரவில்லை. எப்படி வரும்! போரில்