மருதூர் மாணிக்கம்
149
படித்த மங்கையான வள்ளியின் இள உள்ளத்திலோ, அவன் வீரம், கல்வி, பண்பு, அன்பு ஆகிய நற்குணங்கள் ஆழப்பதிந்தன. அவனில்லாமல் ஒரு கணம் போவது அவளுக்கு ஒரு யுகம் போலாயிற்று.
குடிதழைக்க வந்தவன் என்று கண்ணாயிரம் இப்போது அவனைப் போற்றினாள். அவனைக் குடும்பத்துடன் ஒரு குடும்ப உறுப்பினனாகச் சேர்த்துக்கொண்டு விட வேண்டும் என்ற ஆர்வம் அவள் உள்ளத்தில் எழுந்து வளர்ந்தது. வண்ணானோ இதை ஒரு தெய்வப்பேறாகக் கருதினான். அது கைகூடத் தக்கதா என்று மட்டுமே அவன் கவலைப்பட்டான். அவர்கள் பேச்சு வள்ளியின் உள்ளத்தில் இயல்பாய் முளைத்த ஆர்வத்தை வளர்த்தது. அவர்கள் விருப்பமறிந்து, அவள் பாரத வீரனிடம் மெள்ளத் தன் உள்ளந்திறந்து காட்டினான்ள். அவன் கருத்தறிய அவள் அவன் உள்ளம் தடவினாள்.
மருமகள் செங்காவியிடம் பாரத வீரன் உயிரையே வைத்திருந்தான். அதேசமயம் உயிரையும் மிஞ்சிய பாசத்துடன் வள்ளி அவன் உள்ளத்தில் படர்ந்தாள். எனினும் ‘இளவரசி'யின் அன்புத் தளையை அவன் மறக்க முடியவில்லை. வள்ளியிடம் அவன் தன் உள்ள முழுவதும் திறந்து காட்டினான். தன் வீர உலாமுயற்சி, இளவரசியின் அன்புக் கட்டளை, அதனைப் பின்பற்றிய தன் நடவடிக்கைகள் ஆகிய யாவும் கூறினான். “உன்னிடம் எனக்கு அளவற்ற நேசம் உண்டு. ஆனால் என் நெஞ்சு இளவரசிக்கே உரியதாகிவிட்டது. என் வீர வாழ்க்கைக் குறிக்கோளுடன் அவள் புகழ் பின்னிவிட்டது” என்று அவன் கூறினான். இளவரசியின் பரிசான முன்தானைத் துண்டையும் அவன் எடுத்துக்காட்டினான்.
வள்ளியின் இளம் பெண் மனத்தை அவன் கதை உருக்கிற்று. ஆனால் அவள் ஆவலைக் குறைக்கவில்லை. பல மடங்கு பெருக்கவே செய்தது. மேலும் அவள் விருப்பத்தை அவன் மனமார மறுக்கவில்லை. தடை நிலையையே விளக்கினான். விளக்கும்போதும் அவன் முகத்திலும் துயர் படர்ந்திருந்தது. அது அவளுக்கு ஆறுதல் தந்தது. ஊக்கமும் அளித்தது. அவள் தாய் தந்தையரிடம் எல்லாம் கூறினாள். அவர்களுடன் கலந்து பேசினாள்.