கட்டுரை முத்தாரம்
91
நடிப்புக்கலையில் தன் திறம் பற்றிப் பேசத் தொடங்கிய கோமாளி நண்பர் அக்கலையனுபவம் பற்றியும் அக் கலை யின் தன்மைகள் பற்றியும் விரிவுரை வகுக்கலானார்.
அவர்: "எல்லாரும் பேசுவதுபோல் பேசுவதும், எல்லாரும் நடப்பதுபோல் நடிப்பதுந்தான் நாடகக்கலை என்று பலர் எண்ணுகிறார்கள். இது தவறு. எல்லாரும் பேசுவதுபோல் பேசுவதைக் கேட்கவா ஆட்கள் பணம் கொடுத்துப் பார்க்க எண்ணுகிறார்கள். நடிகன் உணர்ச்சிகளைப் பெருக்கிச் செறிவாக்கிப் புதுக்கட்டங்களை வகுத்துப் புத்துணர்ச்சிகளைத் தூண்ட வேண்டும். இது என் பிறப்புரிமை - என் குடிமரபு உரிமையன்று, என்று தனி உரிமை - என்பதை நான் விரைவில் கண்டுகொண்டேன்.
"நான் சென்றபின் எங்கள் முதல் ஆட்டமே வெற்றி தந்தது. அதில் என் பங்கு பெரிது என்று நான் எண்ணிக்கொண்டேன்.என் கட்டம் கதைநடுவே விளக்கணைப்பதுதான். வரவர இச் சிறு செயலில் என் முழுப்பெருமிதமே தோன்ற நடந்து கொண்டேன். வரவரக் காட்சி வெற்றி பெற்றது. எல்லாரும் தத்தம் திறமை வெற்றிக்கு உதவிற்று என்று மகிழ்ந்தனர். இறுதி நாளன்று நான் பெருவெற்றியை எதிர்பார்த்து நுழைவுச்சீட்டின் மதிப்பையும் இரட்டிப்பாக்கியிருந்தோம். ஆனால் எங்கள் தலைமை நடிகருக்கு அன்றைக்குப் பார்த்து உச்சநிலைக் காய்ச்சல் வந்துவிட்டது. இது கழகத்துக்கு இடிபோலிருந்தது. அவன் வேண்டுமென்றே நோயை அழைத்திருந்தால் எப்படிச் சீறுவரோ அப்படி அவன் மீது எல்லாரும் சீறினர். ஆனால் சீற்றத்தால் பயனென்ன? ‘நான் அப் பகுதியையும் சேர்த்து நடிக்கிறேன்' என்றேன்.
“என் துணிச்சல் எல்லாரையும் மலைக்க வைத்தது. ஆனால் அவர்கள் மலைப்பு என் துணிச்சலைப் பெருக்கிற்று. நான் என் புதுநடிப்பை நாடகத்தில் மட்டுமன்றி,நடிகரிடமே தொடங்கினேன். என் நோக்கம் கழகத்தலைவரின் உண்கல, குடிகல ஆட்சியைக் கைப்பற்றுவதே. என் புது நடிப்பு இதில் உதவிற்று. நான் வேண்டியது உண்டேன்; குடித்தேன். யாரும் தடுக்கவில்லை. குடிவெறி மூளையையும் நரம்புகளையும் முறுக்கிவிட்டது.என் நினைவாற்றல் குடியாற்றலால் பெருகியது கண்டேன்.