பக்கம்:அப்பாத்துரையம் 42.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கட்டுரை முத்தாரம்

117

இப்புகழ்ப்பேருரை கேட்கும் ஆர்வம் ஒருநாள் காலை விடியுமுன்பே என்னை எழுப்பிவிட்டது. விடியுமுன்பே புறப்பட்டுப் பத்துக்கல் தொலையும் நடந்தேன், அவ்வளவு தொலை அவ்வளவு விரைந்த கடுநடை நான் நடந்ததில்லை - இனியும் நடக்கப்போவதாகத் தோற்றவில்லை. அது நடக்கத் தக்க பருவமுமல்ல; அக் கடுங்குளிர் காலத்தின் உறைபனியும், மூடுபனியும் எல்லாரையும் வீட்டுக்குள்ளே கூடப்போர்வையின் உட்புறத்தைவிட்டு வெளிவராதிருக்கச் செய்யும். ஆனால், இவற்றிடையே நான் நடந்து சென்றேன்; அவாவுடனும் மகிழ்ச்சியுடனும் கிளர்ச்சியுடனும் நடந்துசென்றேன்.

கோவிலகத்தார் நூறாவது திருப்பாடல் பாடினர். அதன்பின் திரு. காலரிட்ஜ் எழுந்து தன் பேருரையின் மூலப் பாடத்தை வாசித்தார். அவர் பேருரையின் மாயத்தில் பாதி அவர் வாசிப்பிலேதான் அடங்கியிருந்தது. "மலைமீதேறி வழிபடச் சென்றார் எம்பெருமான், தானே, தன்னந்தனியே சென்றார்.” இந்த வாசகத்தை எல்லாரும் எத்தனையோ இடங்களில் எத்தனையோ தரம் கேட்டிருப்பார்கள். நானும் எத்தனையோ தரம் கேட்டிருப்பார்கள். நானும் எத்தனையோ இடங்களில் கேட்டுத்தானிருக்கிறேன். ஆனால், அன்றுதான் அச்சொற்களின் முழு உயிரை, அதன் முழுஓசை இயக்கத்தை நான் கேட்க முடிந்தது. “எம்பெருமான், தானே, தன்னந்தனியே” என்ற சொற்கள், ஒன்றையடுத்து ஒன்றாக, ஒன்றன் முழக்கம் மண் ணுலகத்திலிருந்து ஒருவரையழைத்துக்கொண்டு படிப் படியாக வானுலகில் இட்டுக்கொண்டு செல்வது போன்றிருந்தது. தாம் நிற்குமிடத்தை யாவரும் மறந்தனர் - காட்சித் திரையின்றி, ஒளி விளக்கப் பொறியின் உதவியின்றி, எல்லாரும் பாலஸ்தீன் மலைமீது இயேசுவாகிய எம்பெருமானைக் கண்டனர் - அவர் தன்னந் தனிமையை உணர்ந்தனர். அவர்களே கலீலிவாண ராயினர்!

மக்கள் மண்ணுலகை மறந்தனர் என்பது மட்டுமல்ல; மண்ணுலகின் சமய உரை என்பதையும் மறந்தனர். வானுலகின் சமயம், கவிதை, அவர்கள் உள்ளங்கவர்ந்தது. உவமைகள், அடுக்குமொழிகள், உணர்ச்சியார்வமிக்க சொல்லோ வியங்கள் ஆகியவற்றின்மீது அவர் தாமும் மிதந்து பிறரையும் மிதந்து செல்லவைத்தார்.