பக்கம்:அப்பாத்துரையம் 42.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




132 ||

அப்பாத்துரையம் - 42

உழைப்பின்றி வாழ்வில்லை, நாகரிகமில்லை! கலை, இலக்கியம், அறிவியல் ஆகிய யாவும் உழைப்பின் பயன்தான். கூரறிவு என்பதும் கலை நுட்பம் என்பதும் அறிவாற்றல் என்பதும் நீடித்த உழைப்பு, பயிற்சி, ஆகியவற்றின் பயனேயன்றி, இயல்பாய் அமைபவையல்ல. அறிவுத் திறம் என்பது ஒன்று நீடித்த அல்லது கடுமையான உழைப்புக்கான தகுதியாயிருக்கக் கூடும்; அல்லது அதன் விளைவாயிருக்க வேண்டும். கடு உழைப்புக்கான தகுதிகூட உண்மையில் முன்னைய உழைப்பின் பயன் மட்டுமே. ஆகவே, உழைப்பின் வாயில் கடந்தல்லாமல் எவரும் செல்வமோ, வளமோ, கலையோ, அறிவோ பெறமுடியாது என்பது திண்ணம்.*

உழைப்பின் இன்றியமையாச் சுமைபற்றி முணுமுணுப் பவரும் குறை கூறுபவரும் உண்டு. உழைப்புக்கும் நல்வாழ்வுக்கும் உள்ள தொடர்பை இவர்கள் அறியமாட்டார்கள். அறிவும் இன்பமும் உள்ளே பொதிந்த புறத்தோடு அது என்பதை அவர்கள் எண்ணுவதில்லை. உழைப்பை வெறுப்பவரினும் வறுமையை வெறுப்பவர் மிகுதி. ஆனால், வறுமையை விட உழைப்பிலா மடிமை மிகக் கொடிது. சோம்பேறியிடமே பேரவா, முன்கோபம், மன எரிச்சல், வன்கண்மை, கொடுமை ஆகிய எல்லாத் தீய குணங்களும் குடியேறுகின்றன. இவை யெல்லாவற்றாலும் விளையும் தீமைகள் சுற்றுமுகமாகச் சோம்பலின் தீமைகளே.

பயனை

உழைப்பு முழுப்பயன் தரவேண்டுமானால், நாம் திட்டமிட்டு உழைக்கவேண்டும். உழைப்பின் எதிர்நோக்கி, விரும்பும் பயனுக்கேற்ற வகையில் உழைக்க முனையவேண்டும். தேவைக்காக மட்டும் உழைப்பவரிடம் இவ்வறிவுப்பண்பு அமையமாட்டா. இன்றைய தேவை கடந்த நாளைத் தேவை, அதுவும் கடந்த நிலையான பயன், தனி மனிதன் கடந்த பொது மனிதவாழ்வு ஆகிய படிகளில் கடக்காமல் இம் முன் கருதலும், அறிவுத் திறமும், திட்டமும் அமையமாட்டா. ஆகவே, தேவைக்காக மட்டும் உழைக்காமல், உழைப்பார்வத் துடன் உழைப்பதே உயர் உழைப்பு. இறந்த காலம் நோக்கிய சோம்பல், நிகழ்கால நோக்கிய மடஉழைப்பு ஆகியவற்றைவிட எதிர்கால நோக்கிய அறிவு உழைப்பே வளர்ச்சிதரும்.