144
||-
அப்பாத்துரையம் - 42
இதுமட்டுமல்ல; அது மிகக் கடுமையான நற்பண்புமல்ல. அதனால் எவ்வளவோ தொல்லைகளிலிருந்து, கவலைகளி லிருந்து, மானக்கேடுகளிலிருந்து விடுதலை பெறலாகும். அதன் வழியில் இருக்கக் கூடும் தடங்கல் ஒன்றே ஒன்றுதான்; அதுவும் மிகவும் சிறியதொரு தடங்கல். அது, தற்காலிக இன்பத்தைத் தடுக்கிறது - நிலையான இன்பங்களையல்ல; அது சோம்பேறியின் தற்காலிக இன்பத்தைத் தடுக்கின்றது; ஆனால், சோம்பலையும் நிலையான தொல்லைகளையும் நீக்குகிறது. பல நேர்மையான இன்பங்களை, ஊதாரித்தனத்தாலும் வீண் செலவாலும் தடைப்பட்டுக் கெடும் பல ன்பங்களை அதனால் பெற
வழியுண்டு.
சிக்கன வாழ்வுக்கு உயர்தர வீரம் வேண்டுவதில்லை; பெருங் கோழையைத் தடுத்தால் போதும். உயர் அறிவு வேண்டு வதில்லை; மிகப் பொதுநிலையான அறிவு போதுமானது, மிக உயர் பண்பு தேவையில்லை; நடுநிலைப் பண்பு பயன் தந்துவிடும். அதுவே உயர் வாழ்வுக்கு வழி வகுக்கும் பெரும் பண்பு அன்று; ஆனால், மிக இழி வாழ்வுக்குச் செல்லாது தடுத்து, நாள்முறை வாழ்வை நல்வாழ்வாக்கும் மட்டான முதற்பண்பு ஆகும். அதற்குப் பெருந்துணிவும் வேண்டா; நீடித்த வீர உழைப்பும் வேண்டா. சிறிது சுறுசுறுப்பு; சிறிது பொறுதி; சிறிது முதல் தன்மறுப்பு ஆகியவை தொடக்கத்தில் இருந்தால், பின் சகடம் தானாகவே ஓடும். அது ஓயாது இழுக்கவேண்டும். தேர் அல்ல; தள்ளிவிட்டால் தன் இயல்பில் தானே நெடுந்தொலை ஓடும் சறுக்கு வண்டி அது. 'தொடங்குக, பின் நீ மடங்க மாட்டாய்’ என்பதே அதன் அழைப்புக் குரல். தொடக்க வெற்றியே அடுத்த முயற்சியைத் தூண்டப் போதியதாயிருக்கும்.
சேமிப்பின் சிறுமை கண்டு அதை ஏளனமாக நினைக்க வேண்டா. எவ்வளவு சிறு தொகை, இது இருந்து என்ன, போய் என்ன என்று நினைப்பவர்கள் பெரிதும் ஏமாறுவார்கள். ஏனெனில், தான் செலவு செய்யும் போது சிறிதாயிருக்கும் அதே தொகை சேமித்துவந்தவன் வாழ்வில் சிறு சேமமா யிராமல் பெருஞ் சேமம் விளைவிப்பதை நாம் கண்கூடாகக் காண்டல் கூடும். ஏழைத் தொழிலாளிகளுக்கென வகுத்தமைக்கப்பட்ட சேமவைப்புக்களில் உழைத்தீட்டியதன் ஒரு சிறு துணுக்கை