வாழும் வகை
179
அடிப்படையான நாகரிகம் உடையவராதலால், ஆங்கில நாட்டுக்குள் ஆங்கிலேயரின் இக்குறுகிய பண்பு வெளிப்படத் தோற்றுவ தில்லை. குடும்ப எல்லைக்குள் அடைபட்டுக் குடும்ப உலகில் வாழும் ஆங்கிலேயர்கள் குடும்பக் கண்கொண்டு குடும்பங்களைப் பார்த்துக் குடும்ப உலகில் அமைந்து வாழ்கின்றனர். ஆனால், வெளிநாடுகளில் சென்றதும் வெளிநாட்டினருடன் பழகத் தொடங்கியதும் அவர்கள் குறுகிய தன்னலச்சூழல் எவர் கண்ணையும் உறுத்தாமலிருப்பதில்லை. அவர்கள் ஒருவனுடன் பேசுமுன், அவனைத் தம்முடனொத்த மனிதனாகக் கருதி, அவன் திசையில் நோக்குமுன் அவன் தம் அகர வரிசைப்படி பண்புடையவனா என்று காணவேண்டும். அஃதாவது தம்குடும்ப எல்லை, தற்சார்பு எல்லையில் நிற்பவனானால், அவனுடன் அவர்கள் பழகமுடியும். அல்லாவிட்டால் பழகமாட்டார்கள்.
ஆங்கிலேயர் பண்பு கட்டுப்பாடுடையது. ஆகவே தான் அவர்கள் பண்பு பிறர் பண்புகளினும் உயர்வுடையதாயினும், ஒரு குறிப்பிட்ட எல்லையில் நின்று அதைத் தாண்டமுடியாது பின்தங்கிவிடுகிறது. ஃவிரான்சு நாட்டில் குடும்பப்பண்பை எட்டாத மக்களிடையே நல்லோரிடையே ஓரளவு சமூகப் பண்பைக் காணலாம். அறவோர் அருளாளரிடையே ஓரளவு உலகளாவிய நோக்கைக் காணலாம். ஆனால், ஆங்கிலேயனுக்கு நாடு என்பது குடும்பக் கோட்டைகளின் ஒரு கூட்டுறவு. அவ்வளவுதான். தனிமனிதர் குடும்பக் கோட்டைகளின் உரிமைக் காவலர்; அவ்வளவே. அவர்கள் உலக வாணிகம் செய்வர்; குடும்ப நலவாழ்வு மட்டும் நாடித்தான்! சமயப்பரப்புதல் செய்வர், அறநிலை பேசுவர், அருள்திறம் தீட்டிக் காட்டுவர். பிறநாட்டுச் சமயவாணர், அறவோர், அருளாளர் கண்களில் அவை தன்னல அடிப்படை, தனிக் குடும்பவாழ்வின் அடிப்படையின்மீது தீற்றிப் பூச்சுப்பூசப்பெற்ற சமயம், அறம், அருள் ஆகவே காட்சி அளிப்பதில் வியப்பில்லை. தாயகம், தாய்நாடு, நாட்டாட்சி என்பதற்கு ஆங்கில மொழியில் அமைந்த சொல் ‘குடும்பம்’ என்பதே! இது வெறும் மொழி மரபன்று, பண்பு மரபே.
உரோமப் பேரரசின் எல்லை அதன் வாள் என்றால், ஆங்கிலப் பேரரசின் எல்லை அவர்கள் குடும்ப வாழ்வு என்னலாம்.