வாழும் வகை
211
திறமையற்ற முதலாளிகளும் அறிவு குறைந்த முதலாளி இயந்திரங்களும் திறமையற்ற ச் சுரண்டல் முறையையே நம்பியிருப்பதும் உண்மையே. ஆனால், சுரண்டல் முறை தற்கால ஆதாயம் தரலாம்; நிலையான ஆதாயம் தராது. ஆதாயத்துக்குச் சுரண்டுதலை ஆதாரமாகக்கொள்ளும் முதலாளியும், முதலாளித்துவமும் பிற முதலாளிகளின் சுரண்டல் போட்டி ஆகியவற்றுக்கு ஆளாய் அழிவதும், அழிவை வரவழைப்பதும் உறுதி. இத்தகைய முதலாளிகளின் குழுப் போட்டியில் வரவரக் குறைவுற்று அவ்வினம் அழிவுக்குப் படிப்படியாகச் செல்லும்.
ஆனால், தொழிலாளிகளுடன் ஒத்துணர்வு, ஒத்துழைப்பு, அவர்களுக்கு உதவி செய்தல் ஆகியவற்றின் மூலம் ஆதாயம் பெருக்கி, அவ்வாதாய உயர்வில் தொழிலாளிக்கும் பங்கு தரும் முதலாளி அழியமாட்டான். அவன் கீழுள்ள தொழிலாளிகள் வாழ்க்கை வளம் பெறுவதுடன், அவர்களைப் படிப்படியாகச் சிறு முதலாளிகளாக்கி, அதே சமயம் அவன் பெருமுதலாளி யாகவும் வளர்வான். தொழிலாளி நலம் பேணும் இத்தகைய முதலாளிகளின் குழு இங்ஙனம் பெருகுவதால், இத்தகைய முதலாளித்துவம் வளர்ச்சியடைந்து நாட்டு வளர்ச்சி, உலக வளர்ச்சி ஆகிறது.
ஒத்துழைப்பு, உதவி, ஒத்துணர்வு ஆகியவற்றைவிட இரக்கம், ஈகை ஆகிய பண்புகளைப் பலர் உயர்வுடையவை என்று கருதுகின்றனர். முந்திய பண்புகளில் கொடுப்பவன் இழப்பது சிறிது. பிந்தியவற்றில் மிகுதி. இதுவே இப்பண்புகளை உயர்வுடையவை யாக்குவதாகப் பலர் எண்ணக் காரணம். ஆனால், பண்பின் உயர்வு அதை உடையவரின் இழப்புக்குச் சரியான தென்று கருதுவது போன்ற பேதைமை பிறிதில்லை. கொடுப்பவன் இழப்பதே உயர் பண்பு என்பது உண்மையாகக் கூடுமானால், நன்றியுடைய நல்லாருக்குக் கொடுப்பதினும் நன்றிகெட்ட தீயர்க்கும், குடியர்க்கும், கொலைகாரருக்கும் கொடுப்பது உயர்பண்பா
யமையவேண்டும். அல்லது
மனிதருக்குக் கொடுப்பதினும் குப்பையில் கொட்டுவது மேம்பட்டதாக வேண்டும். உண்மையில் கொடைப் பண்பின் உயர்வு கொடுப்பவர் இழப்பினால் மிகுதிப்படுமாயினும், அதனைப் பொறுத்ததன்று; பெறுபவர் நலத்தைப் பொறுத்ததே.